தெற்காசியாவின் அதிவேக கனிஷ்ட வீரரான மெரோன் வீரசிங்க

South Asian Junior Athletics Championship 2024

26
South Asian Junior Athletics Championship 2024

சென்னையில் உள்ள நேரு உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (11) ஆரம்பமாகிய 4ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை வீரர்கள் 2 போட்டி சாதனைகளுடன் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

இதில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மெரோன் விஜேசிங்கவும், ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் சவிந்து அவிஷ்க ஆகிய இருவரும் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர். இதில் மெரோன் விஜேசிங்க, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை கனிஷ்ட சாதனையையும் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். அத்துடன், பெண்களுக்கான உயரம் பாய்தலில் இலங்கை வீராங்கனைகளான கஷ்மிகா திமேஷி மற்றும் நேத்ரா சமாதி ஆகிய இருவரும் வெள்ளிப் பதக்கங்களை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனம், இந்திய மெய்வல்லுனர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து நடத்தும் 4ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நவீனமயப்படுத்தப்பட்ட சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நேற்று (11) மாலை ஆரம்பமாகியது. இம்முறை போட்டித் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவுகள் என 7 நாடுகளிலிருந்து 28 வகையான விளையாட்டுகளில் 210 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

>>இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் அணியில் முதல் தடவையாக இடம்பிடித்த முல்லைத்தீவு மாணவன்<<

போட்டித் தொடரின் முதல் நாளான நேற்று இந்திய வீரர்கள் 100 மீற்றர், 800 மீற்றர், குண்டு எறிதல் மற்றும் உயரம் பாய்தல் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. இதன்படி, போட்டிகளின் முதலாவது தங்கப் பதக்கத்தை ஆண்களுக்கான குண்டு எறிதலில் கலந்து கொண்ட இந்தியாவின் சித்தார்த் சவுத்ரி பெற்றுக்கொண்டார். குறித்த போட்டியில் 19.19 மீற்றர் தூரத்தை எறிந்து அவர் புதிய போட்டி சாதனையும் படைத்தார்.

இதனிடையே, குறித்த போட்டியில் மற்றுமொரு இந்திய வீரரான அனுராக் .சிங் காலேர் (18.91 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கை வீரர் ரஹின்த அல்விஸ் (15.62 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

பெண்களுக்கான உயரம் பாய்தலில் கஷ்மிகா திமேஷி மற்றும் நேத்ரா சமாதி ஆகிய இருவரும் 1.65 மீற்றர் உயரம் தாவி இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். இதில் இந்திய வீராங்கனை பூஜா 1.80 மீற்றர் உயரம் தாவி புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இதனிடையே, இருபாலாருக்குமான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். இதில் ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடமும், 49.83 செக்கன்களில் நிறைவு செய்த சவிந்து அவிஷ்க புதிய தெற்காசிய கனிஷ்ட சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியின் ஆரம்பம் முதலே இரண்டு இந்திய வீரர்களும் சவிந்துவுக்கு சவாலாக இருந்த போதிலும், போட்டியின் கடைசி சில மீற்றர்களில் சவிந்து போட்டியின் முடிவை மாற்றியமைத்து இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தார். இந்தியாவின் வினோத் குமார் 2ஆவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும், போபண்ணா கிளாப்பா 3ஆவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய தருஷி அபிஷேகா, போட்டியை 2 நிமிடங்கள் 10.17 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்க்கத்தை தனதாக்கிக் கொண்டார். இப்போட்டியை 2 நிமிடம் 12.13 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கையின் சன்சலா ஹிமாஷனி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இதற்கிடையில், நேற்றைய கடைசி போட்டி நிகழ்ச்சியாக நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டி இடம்பெற்றது, இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மெரோன் விஜேசிங்க மற்றும் தினெத் இந்துவர ஆகியோர் களமிறங்கினர்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியை 10.41 செக்கன்களில் நிறைவு செய்த மெரோன் விஜேசிங்க, புதிய தெற்காசிய கனிஷ்ட சாதனை மற்றும் இலங்கை கனிஷ்ட சாதனைகளை முறழயடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

முன்னாதாக 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கை வீரர் யேசுதாஸ் 10.16 செக்கன்களில் ஓடி முடித்து நிலைநாட்டிய சாதனையை 11 ஆண்டு;களுக்குப் பிறகு இவர் முறியடித்தார்.

இப்போட்டியில் இலங்கையின் தினேத் இந்துவர (10.49 செக்.) வெள்ளிப் பத்தக்கத்தையும், இந்தியாவின் ஜெயராம் (10.56 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் ஷெனல்லா செனவிரத்ன (12.04 செக்.) வெண்கலப் பதக்கம் வென்றார்.

>>பாரிஸ் பராலிம்பிக்கில் சரித்திரம் படைத்தார் சமித்த துலான்<<

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாள் முடிவில், 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்ற இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தையும், 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்ற இலங்கை 2ஆவது இடத்திலும் உள்ளன.

இதேவேளை, தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது நாளான இன்று (12) ஆண்கள், பெண்களுக்கான நீளம் பாய்தல், ஆண்கள், பெண்களுக்கான தட்nறிதல், ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டம், பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டம், ஆண்கள், பெண்களுக்கான 300ழ ஆயிரம் மீற்றர் ஓட்டம், ஆண்கள், பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டம் ஆகிய போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும்பலமெய்வல்லுனர்செய்திகளைப்படிக்க<<