பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைரும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தானில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள சாம்பியன்ஸ் ஒருநாள் கிண்ணத் தொடரில் வூல்வ்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் 2024-25 உள்ளூர் பருவகாலத்துக்காக நடைபெறவுள்ள மூன்று புதிய போட்டித் தொடர்களை அந்நாட்டு கிரிக்கெட் சபை கடந்த மாத முற்பகுதியில் அறிவித்தது. அந்த வகையில் சம்பியன்ஸ் ஒருநாள் கிண்ணம், சம்பியன்ஸ் T20 கிண்ணம் மற்றும் சம்பியன்ஸ் முதல் தர கிண்ணம் என்ற அடிப்படையில் இந்த தொடர்கள் நடைபெறவுள்ளன.
குறிப்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற தேசிய T20 கிண்ணம், குவாய்ட்–இ–ஆசாம் கிண்ணம், தலைவர் கிண்ணம் மற்றும் பாகிஸ்தான் சுப்பர் லீக் உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் நாட்காட்டிக்கு மேலதிகமாக இந்த 3 புதிய தொடர்களும் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 5 அணிகள் பங்குபற்றும் ள சாம்பியன்ஸ் ஒருநாள் கிண்ணத் தொடர் இம்மாதம் 12ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை பைசலாபாத்தில் உள்ள இக்பால் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதுடன், குறித்த 5 அணிகளுக்கும் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் பற்றிய விபரங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது.
இதன்படி, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான யூனிஸ் கான், சக்லைன் முஷ்டாக், மிஸ்பா உல் ஹக், சொஹைப் மலிக் மற்றும் சர்பராஸ் அஹ்மட் ஆகிய ஐவரும் சாம்பியன்ஸ் ஒருநாள் கிண்ணத் தொடரில் ஆடும் 5 அணிகளினதும் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஐந்து ஆலோசகர்களில் சர்பராஸ் அஹமட் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றார். சொஹைப் மலிக்கும் தனது ஓய்வை அறிவிக்கவில்லை என்றாலும், உள்ளூர் T20 போட்டிகளில் அவர் விளையாடி வருகின்றார்.
- அபார வெற்றியுடன் ஒருநாள் தொடரை ஆரம்பித்த இலங்கை A அணி
- சரித் அசலன்க அபார சதம்; கொழும்பு அணிக்கு NSL தொடரில் முதல் வெற்றி
- அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை U19 மகளிர் அணி
இந்த நிலையில், வூல்வ்ஸ் அணியின் ஆலோசகராக மிஸ்பா உல் ஹக்கும், ஸ்டாலியன்ஸ் அணியின் ஆலோசகராக சொஹைப் மலிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், டொல்பின்ஸ், லயன்ஸ் மற்றும் பன்தர்ஸ் ஆகிய 3 அணிகளுக்குமான ஆலோசகர் யார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே, பாகிஸ்தானின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் தலைவரும், விளையாட்டின் மிகவும் மதிக்கப்படும் ஆளுமைகளில் ஒருவருமான மிஸ்பா உல் ஹக், தனக்கு கிடைத்த பதவி தொடர்பில் கருத்து வெளியிடுகையில், வூல்வ்ஸ் அணியின் ஆலோசகராக மீண்டும் இணைவதற்கும், நமது வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதற்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பாத்திரம் எனது அனுபவம் மற்றும் அறிவை பகிர்ந்து கொள்ள மட்டுமல்லாமல், அவர்களின் திறன்களை மேம்படுத்த உதவுகிறது.
மேலும், 2019 இல் இருந்து முடிக்கப்படாத சில விடயங்களை முடிக்கவும், எனது பார்வையை நிறைவேற்றவும் எனக்கு வாய்ப்பளிக்கிறது. சம்பியன்ஸ் ஒருநாள் கிண்ணத் தொடர் என்பது நாட்டின் சிறந்த வீரர்கள் ஒவ்வொரு போட்டியும் முக்கியமான வடிவத்தில் கடுமையாகப் போட்டியிடும் பரபரப்பான நிகழ்வாகும். இந்தப் போட்டித் தொடர் பைசலாபாத் ரசிகர்களுக்கு உயர்தர கிரிக்கெட்டை வழங்குவதோடு, நமது வீரர்கள் தங்கள் உச்சகட்டத்தில் செயல்பட ஊக்குவிக்கும் என்று உறுதியளிக்கிறது என தெரிவித்தார்.
உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தொடரின் மூலம் பாகிஸ்தான் உள்ள திறமையான வீரர்களைக் கண்டறிந்து அவர்களை பாகிஸ்தான் அணிக்கு விளையாட தயார்படுத்துவதில் இந்த 5 ஆலோசர்களும் முக்கிய பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இந்த 5 ஆலோசகர்களும் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு ஆண்டு சம்பளமாக 5 மில்லியன் ரூபாவை வழங்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<