சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) புதிதாக வெளியிட்டுள்ள டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் வீரர்கள் சிறந்த முன்னேற்றங்களை கண்டுள்ளனர்.
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்த தினேஷ் சந்திமால் மற்றும் சதமடித்திருந்த கமிந்து மெண்டிஸ் ஆகியோர் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முன்னிலைப்பெற்றுள்ளனர்.
“சந்திமாலின் ஆதரவுதான் சதமடிக்க காரணம்” – கமிந்து மெண்டிஸ்
தினேஷ் சந்திமால் 4 இடங்கள் முன்னேறி 23வது இடத்தையும், கமிந்து மெண்டிஸ் 8 இடங்கள் முன்னேறி 36வது இடத்தையும் பிடித்துள்ளனர். கமிந்து மெண்டிஸ் முதல் டெஸ்ட் போட்டியில் 113 ஓட்டங்களை விளாசியிருந்ததுடன், தினேஷ் சந்திமால் உபாதையுடன் துடுப்பெடுத்தாடி 79 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இங்கிலாந்து அணியை பொருத்தவரை ஜோ ரூட் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன், ஹெரி புரூக் 3 இடங்கள் முன்னேறி 4வது இடத்தையும், ஜெமி ஸ்மித் 22 இடங்கள் முன்னேறி 42வது இடத்தையும் பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரபாத் ஜயசூரிய ஒரு இடம் முன்னேறி 09வது இடத்தை பிடித்துக்கொண்டார். இவருடன் அசித பெர்னாண்டோ 10 இடங்கள் முன்னேற்றத்தை கண்டு 17வது இடத்தையும், இங்கிலாந்து அணியின் கிரிஸ் வோக்ஸ் 4 இடங்கள் முன்னேறி 16வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையை பொருத்தவரை துடுப்பாட்டத்தில் ஜோ ரூட், பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சகலதுறை வீரர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதலிடத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<