“சந்திமாலின் ஆதரவுதான் சதமடிக்க காரணம்” – கமிந்து மெண்டிஸ்

Sri Lanka tour of England 2024

2

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் பெறுவதற்கு தினேஷ் சந்திமால் உபாதையுடன் வழங்கிய இணைப்பாட்டம்தான் காரணம் என இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் தெரிவித்துள்ளார். 

லோர்ட்ஸில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கமிந்து மெண்டிஸ் இதனை தெரிவித்தார். 

ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா நியமனம்!

நான் துடுப்பெடுத்தாடும் போது அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரிடமிருந்து சிறந்த பங்களிப்பு கிடைத்தது. இதில் தினேஷ் சந்திமால் விரல் உபாதையுடன் அணிக்கு தேவையான ஓட்டங்களை குவித்தார். 

நான் சதமடிப்பதற்கு சந்திமால் எனக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்தார். சந்திமால் மற்றும் மெதிவ்ஸ் ஆகியோரின் அனுபவங்கள் எனக்கு உதவியது. ஆடுகளத்தில் என்ன நடக்கிறது என்பதை என்னுடன் இவர்கள் பகிர்ந்துக்கொண்டனர்என கமிந்து மெண்டிஸ் குறிப்பிட்டார். 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனன்ஜய டி சில்வாவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதால், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் கமிந்து மெண்டிஸ் அறிமுகத்தை பெற்றார். அறிமுக போட்டியில் அரைச்சதம் அடித்தும் தனன்ஜய டி சில்வாவின் வருகையின் பின்னர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

அணியின் துடுப்பாட்டம் வலுவாக இருந்தது. எனவே எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் பிரகாசிக்க தயாராக இருந்தேன். அரைச்சதம் கடந்த பின்னர் அணியிலிருந்து வெளியேற நேரிட்டது. அதில் எந்த தவறும் இல்லை. அணியை கட்டமைப்பதற்கு பல தீர்மானங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். தனன்ஜயவுக்கு கொவிட்-19 தொற்று காரணமாக அணியில் இணைந்தேன். அவர் மீண்டும் அணிக்கு வரும் போது அவருக்கான இடத்தை கொடுப்பது சரியான விடயம்.” 

அதேநேரம் அணியில் விளையாடாவிட்டாலும், தொடர்ச்சியாக குழாத்துடன் இணைந்து பல தொடர்களில் இருந்த அனுபவம் தன்னுடைய துடுப்பாட்டத்துக்கு உதவியதாகவும் கமிந்து மெண்டிஸ் சுட்டிக்காட்டினார். மேலும் தன்னுடைய துடுப்பாட்ட பிரகாசிப்பு தொடர்பில் குறிப்பிட்ட இவர், 

தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்த ஜப்னா, கோல் அணிகள்

நான் என்னுடைய அடிப்படையை சரியாக செய்ய முயல்கிறேன். பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த எண்ணுகிறேன். குறிப்பிட்ட நாளில் அணிக்கு தேவையானவற்றை செய்வதற்கு எத்தணிக்கிறேன். பந்துவீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு என அணிக்கு எது தேவையோ குறிப்பிட்ட விடயங்களை செய்வதற்கு தயாராக உள்ளேன் என்றார். 

இதேவேளை லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாடவுள்ளமை தொடர்பில் குறிப்பிட்ட இவர், நான் என்னுடைய கனவை இந்த வாரம் அடையவுள்ளேன். சிறு வயதிலிருந்து லோர்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவுஎன்னுடைய மட்டுமல்ல கிரிக்கெட் வீரர்களின் அனைவரதும் கனவு இதுவாகதான் இருக்கும். என்னால் அதனை அடைய முடிந்துள்ளது. இந்தப் போட்டியில் எம்மால் வெற்றிபெற முடிந்தால், இந்த கனவு மேலும் பெறுமதிமிக்கதாக மாறும்என்றார். 

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை புதன்கிழமை (29) லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<