இலங்கை அணிக்காக போராடிய மிலான், தனன்ஞய

Sri Lanka tour of England 2024

155

சுற்றுலா இலங்கைஇங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில் இலங்கை வீரர்கள் பின்வரிசைத் துடுப்பாட்டவீரர்களின் உதவியோடு முதல் இன்னிங்ஸில் 236 ஓட்டங்கள் பெற்றிருக்கின்றனர் 

>> முதல் டெஸ்டில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வீரர்கள் அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் .சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக ஆடுகின்றனர். அந்தவகையில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (21) மன்செஸ்டர் நகரில் ஆரம்பமாகியது 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. இப்போட்டியின் மூலம் மிலான் ரத்நாயக்க டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் பெற்றிருந்தார். 

இலங்கை அணி   

நிசான் மதுஷ்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, மிலான் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ  

இங்கிலாந்து அணி  

டேனியல் லோவ்ரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (தலைவர்), ஜோ ரூட், ஹெரி புரூக், கிரிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மெதிவ் பொட்ஸ், மார்க் வூட், சொஹைப் பஷீர் 

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணியானது ஆரம்பம் முதலே தடுமாற்றம் காண்பித்தது. இலங்கை அணியின் முன்வரிசை வீரர்களான திமுத் கருணாரட்ன (2), நிஷான் மதுஷ்க (4) மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் (0) ஆகியோர் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்த ஒரு கட்டத்தில் 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது 

இதனையடுத்து இலங்கை அணியின் துடுப்பாட்டவீரர்கள் மேலும் தடுமாற்றம் காட்டி 113 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்குச் சென்றனர். எனினும் பொறுப்புடன் ஆடிய தனன்ஞய டி சில்வா அரைச்சதம் விளாசி அணியினை மீட்டார். அத்துடன் அவர் இலங்கை அணியின் 8ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக மிலான் ரத்நாயக்கவுடன் இணைந்து 63 ஓட்டங்களையும் பகிர்ந்தார். தனன்ஞய டி சில்வா ஆட்டமிழக்கும் போது அவர் தன்னுடைய 15ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 74 ஓட்டங்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தனன்ஞய டி சில்வாவின் ஆட்டத்தின் பின் மிகவும் பொறுப்புடன் துடுப்பாடிய அறிமுக வேகப்பந்துவீச்சாளரான மிலான் ரத்நாயக்க அரைச்சதம் விளாசியதோடு அவரின் அரைச்சத உதவியின் காரணமாக இலங்கை அணியானது 74 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்கள் எடுத்தது 

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் மிலான் ரத்நாயக்க கன்னிப் போட்டியில் அரைச்சதம் விளாசி 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் விளாசி 72 ஓட்டங்கள் எடுத்தார் 

இங்கிலாந்துப் பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் சொஹைப் பாஷிர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, கஸ் அட்கின்ஸன் ஆகியோர் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது 

இலங்கை அணியினை அடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பம் செய்த இங்கிலாந்து அணியானது 22 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி காணப்படுகின்றது.   

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<