மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றியீட்டியது இலங்கை!

Sri Lanka Women tour of Ireland 2024

99
Sri Lanka Women tour of Ireland 2024

அயர்லாந்து அணிக்கு எதிரான ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்புக்கான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றியினை பதிவுசெய்தது.

முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்து தொடரை இழந்திருந்த போதும், ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்புக்கான முக்கிய போட்டியாக இந்த போட்டி எதிர்பார்க்கப்பட்டது.

>>முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை பதினொருவர் அறிவிப்பு!<<

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி பந்துவீசுவதற்கு தீர்மானித்தது. அதன்படி பந்துவீச ஆரம்பித்த இலங்கை மகளிர் அணிக்காக முதல் 2 பந்துகளில் அச்சினி குலசூரிய 2 விக்கெட்டுகளை சாய்த்து சிறந்த ஆரம்பத்தை கொடுத்தார்.

குறித்த இந்த ஆரம்பத்தை பயன்படுத்திக்கொண்ட இலங்கை மகளிர் அணி சிறப்பாக பந்துவீசியது. அச்சினி குலசூரிய 3 விக்கெட்டுகளையும், அணித்தலைவி சமரி அதபத்து 3 விக்கெட்டுகளையும் சாய்க்க அயர்லாந்து மகளிர் அணி 122 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அயர்லாந்து மகளிர் அணிக்காக அதிகபட்சமாக அர்லேன் கெலி 35 ஓட்டங்களையும், லியா போல் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். சமரி அதபத்து மற்றும் அச்சினி குலசூரிய ஆகியோரை தவிர்த்து சச்சினி நிசன்சலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் அயர்லாந்து அணி நிர்ணயித்த இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 23.1 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை அடைந்தது.

>>19 வயதின்கீழ் மகளிர் T20 உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு<<

இலங்கை அணியின் ஆரம்பத்தை பொருத்தவரை விஷ்மி குணரத்ன 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்த போதும், சமரி அதபத்து மற்றும் ஹர்சிதா சமரவிக்ரம ஆகியோரின் இணைப்பாட்டம் அணியின் வெற்றியை உறுதிசெய்தது.

சமரி அதபத்து 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்த போதும், ஹர்சிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை இலகுவாக்கினார். பந்துவீச்சில் அவா கென்னிங் 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை சாய்த்தார்.

இதேவேளை மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 2-1 என அயர்லாந்து மகளிர் அணி வெற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<