19 வயதின்கீழ் மகளிர் T20 உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு

West Indies Women’s Tour of Sri Lanka 2024

3

மலேசியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான T20 உலகக் கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 2ஆவது பதிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் திகதி முதல் பெப்ரவரி 02ஆம் திகதி வரை மலேசியாவில் நடைபெற உள்ளது. ஐசிசி நடாத்தும் மகளிருக்கான போட்டித் தொடரொன்றை மலேசியா நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதற்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) நேற்று 18 வெளியிட்டது.

இதில் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில் தென் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் தீவுகளில் ஒன்றான சமோவா தீவுகள் முதல் முறையாக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரொன்றில் விளையாட உள்ளது.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், தற்போது 14 அணிகள் இறுதியாகியுள்ளன. இன்னும் இரு அணிகள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய தகுதிச்சுற்று வாயிலாக இணையவுள்ளன. எனவே, 16 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும்.

இதன்படி, குழு A இல் நடப்புச் சம்பியன் இந்தியா, மலேசியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும், குழு B இல் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளும், குழு C இல் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, சமோவா தீவுகள், ஆப்பிரிக்கா தகுதிச் சுற்று அணி ஆகிய அணிகளும், குழு D இல் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, ஆசிய தகுதிச் சுற்று) ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இலங்கை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் மலேசியாவை ஜனவரி 19ஆம் திகதி சந்திக்கிறது. தொடர்ந்து 21ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுடனும், 23ஆம் திகதி இந்தியாவுடனும் மோதுகிறது.

இந்த நிலையில், ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான T20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் ஜனவரி 31ஆம் திகதியும், இறுதிப்போட்டி பெப்ரவரி 2ஆம் திகதியும் நடைபெற உள்ளது. இதில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு மேலதிக நாள் (அரையிறுதி ஆட்டங்கள் பெப்ரவரி 1 மற்றும் இறுதிப்போட்டி பெப்ரவரி 3) ஒதுக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான T20 உலகக் கிண்ணத் தொடர் முதல் முறையாக கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா மகளிர் அணி சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<