ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் பெதும் நிஸ்ஸங்க முன்னேற்றம்

4

ஐ.சி.சி. மூலம் ஒருநாள் துடுப்பாட்டவீரர்களுக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய தரவரிசையில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான பெதும் நிஸ்ஸங்க முன்னேற்றம் காண்பித்திருக்கின்றார்.

>>இலங்கைத் தொடரினை முழுமையாக இழக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தலைவர்

அந்தவகையில் அண்மைய நாட்களில் இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற பெதும் நிஸ்ஸங்க, புதிய ஒருநாள் துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் 8ஆம் இடத்திற்கு (708 தரநிலைப் புள்ளிகள்) முன்னேறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 9ஆவது இடத்தில் காணப்பட்ட பெதும் நிஸ்ஸங்க இந்தியாவுடன் நிறைவுக்கு வந்த ஒருநாள் தொடரினை இலங்கை கைப்பற்ற முக்கிய பங்களிப்பு வழங்கிய நிலையில் அவர் தொடரில் 101 ஓட்டங்களையும் குவித்திருந்தார். இந்த சிறப்பாட்டமே பெதும் நிஸ்ஸங்க ஒருநாள் அணிகள் தரவரிசையில் முன்னேற முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.

மறுமுனையில் இலங்கையுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 157 ஓட்டங்களை குவித்த இந்திய அணித்தலைவரான ரோஹிட் சர்மா தற்போது துடுப்பாட்டவீரர்கள் வரிசையில் சுப்மான் கில்லை பின்தள்ளி இரண்டாம் இடத்திற்கு (765 தரநிலைப் புள்ளிகள்) முன்னேறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் ஒருநாள் துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கின்றார்.

இதேவேளை ஒருநாள் துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையினை மேலும் நோக்கும் போது இலங்கை அணியின் வீரர்களில் குசல் மெண்டிஸ் 5 இடங்கள் முன்னேறி தற்போது 39ஆவது இடத்தில் காணப்படுவதோடு, அவிஷ்க பெர்னாண்டோ 20 இடங்கள் முன்னேறி தற்போது 68ஆவது இடத்தில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் இலங்கை அணியின் சுழல்பந்து சகலதுறைவீரரான துனித் வெல்லாலகே ஒருநாள் அணிப்பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முன்னேற்றம் காண்பித்திருப்பதோடு, அவர் தற்போது 17 இடங்கள் முன்னேறி 59ஆவது இடத்தில் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<