அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது T20I போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.
>>தி ஹண்ட்ரட் தொடரிலிருந்து பாதியில் அழைக்கப்பட்ட கிரிஸ் வோக்ஸ்!<<
அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையாக களமிறங்கிய கெபி லிவிஸ் அற்புதமாக ஆடி சதமடித்தார். இவர் வெறும் 75 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 17 பௌண்டரிகள் அடங்கலாக 119 ஓட்டங்களை விளாசினார். இவரையடுத்து ஒர்லா பிரெண்டர்கெஸ்ட் 38 ஓட்டங்களை விளாசினார்.
இவர்கள் இருவரின் துடுப்பாட்ட பங்களிப்புகளுடன் அயர்லாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களை குவித்தது. பந்துவீச்சில் அச்சினி குலசூரிய ம்றறும் சஷினி கிம்ஹானி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, விஷ்மி குணரத்னவின் விக்கெட்டை ஆரம்பத்தில் பறிகொடுத்தது. எனினும் ஹர்சிதா சமரவிக்ரம மீண்டும் ஒருமுறை அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். இவருடன் கவீஷா டில்ஹாரி சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை கொடுக்க தொடங்கினார்.
ஹர்சிதா சமரவிக்ரம 44 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களை விளாசினார். எனினும் இவர் துரதிஷ்டவசமாக ஆட்டமிழக்க, இலங்கை அணி கவீஷா டில்ஹாரியின் ஆட்டத்தை எதிர்பார்த்தது.
சிறந்த ஓட்ட வேகத்துடன் இலங்கை அணி சென்ற போதும், சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்தது. கவீஷா டில்ஹாரி மாத்திரம் இறுதிவரை களத்திலிருந்து 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதும், கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை அடைய முடியாமல் இலங்கை அணி 7 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் பிரேயா சேர்ஜண்ட் மற்றும் ஒர்லா பிரெண்டெர்கெஸ்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதேவேளை இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் அணிகள் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றதுடன், தொடர் 1-1 என சமனிலையில் முடிவடைந்தது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<