இலங்கைக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து டெஸ்ட் அணியின் 15 பேர் கொண்ட வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணையும் முன்னாள் இங்கிலாந்து வீரர்
அடுத்த மாதம் இலங்கை வரும் நியூசிலாந்தின் டெஸ்ட் அணி இங்கே ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது.
இந்த டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து குழாத்தில் அறிமுக வேகப்பந்துவீச்சாளர்களான வில்லியம் ஓ’ரூர்க்கே மற்றும் பென் சீயர்ஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் இருவரும் ஏற்கனவே நியூசிலாந்து அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகளுக்கான புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் காணப்படும் நியூசிலாந்து அணிக்கு இலங்கை டெஸ்ட் தொடர் மிக முக்கியமானது என்பதனால் இலங்கையின் சுழல் ஆடுகளங்களை கருத்திற்கொண்டு சுழல் பந்துவீச்சாளர்களான அஜாஷ் பட்டேல், மிச்செல் சான்ட்னர், பகுதிநேர சுழல்வீரர்களான ரச்சின் ரவீந்திரா, கிளன் பிலிப்ஸ் மற்றும் உபாதையில் இருந்து மீண்ட மைக்கல் பிரஸ்வெல் ஆகியோர் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆனால் உபாதையில் இருந்து மீண்டு வரும் கைல் ஜேமிசன் நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்படவில்லை. அத்துடன் நியூசிலாந்து அணி இலங்கை சுற்றுத் தொடரின் போது விஷேட பயிற்சியாளராக பாகிஸ்தானின் முன்னாள் சுழல் நட்சத்திரம் சக்லைன் முஸ்தாக்கினை இணைத்துள்ளது. முஸ்தாக் ஏற்கனவே பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போது நியூசிலாந்து அணிக்கு சுழல் ஆலோசகராக உதவியமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இலங்கை அணியுடனான சுற்றுத் தொடருக்கு முன்னர் இந்தியாவிற்குச் செல்லும் நியூசிலாந்து டெஸ்ட் குழாம் அங்கே ஆப்கானிஸ்தான் அணியுடன் டெஸ்ட் போட்டியொன்றில் ஆடவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து டெஸ்ட் குழாம்
டிம் செளத்தி (தலைவர்), டொம் பிலன்டல், மைக்கல் பிரஸ்வெல், டெவோன் கொன்வே, மேட் ஹென்றி, டொம் லேதம் (பிரதி தலைவர்), டேரைல் மிச்செல், வில்லியம் ஓ’ரூர்க்கே, அஜாஷ் பட்டேல், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிச்செல் சான்ட்னர், பென் சீயர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்
சுற்றுத்தொடர் அட்டவணை
- முதல் டெஸ்ட் – செப்டம்பர் 18-22 – காலி
- இரண்டாவது டெஸ்ட் – செப்டம்பர் 26-30 – காலி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<