இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் திடீர் இராஜினாமா

3

இங்கிலாந்து ஒருநாள், T20i அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மெத்யூ மோட், பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து ஒருநாள், T20i கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளராக அவுஸ்திரேலிய நாட்டவரான மெத்யூ மோட் நியமிக்கப்பட்டார். இவரது பயிற்றுவிப்பின் கீழ் 2022 T20i உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி வென்றது. அதேபோல, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரையும் வென்று அசத்தியது 

ஆனாலும் இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமான தோல்வியைச் சந்தித்து லீக் சுற்றுடனே வெளியேறியது. அத்துடன், அண்மையில் அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் தோல்வியைத் தழுவியது. 

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் தோல்விக்குப் பொறுபேற்று அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மெத்யூ மோட் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்து ஒருநாள், T20i அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அவர் தற்போது பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இது தொடர்பாக தனது டுவிட்டர் சமூகவலைத்தளப் பக்கத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை பதிவிட்டிருப்பதாவது: இங்கிலாந்து ஒருநாள், T20i அணிகளின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மெத்யூ மோட் விலகுகிறார் என பதிவிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மெத்யூ மோட் தனது பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்தமை குறித்து கருத்து தெரிவிக்கையில், இங்கிலாந்து ஆடவர் அணிக்கு பயிற்சியாளராக இருந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்; அது ஒரு மரியாதை. கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றியை அடைவதற்கான முயற்சியில் நாங்கள் அனைத்தையும் செய்துள்ளோம். மேலும், 2022இல் ஒரு அற்புதமான T20i உலகக் கிண்ண வெற்றி உட்பட அந்தக் காலகட்டத்தில் அணி வெளிப்படுத்திய திறமை மற்றும் ஆர்வத்தைப் பற்றி நான் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார் 

இதனிடையே, இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்துஅவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் T20i தொடரில் அவர் தலைமைப் பயிற்சியாளாராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. 

இதேவேளை, இங்கிலாந்து அணிக்கு புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரொப் கீ தெரிவித்துள்ளார். 

இதேவேளை, புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கான பெயர்களில் இலங்கையின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் முன்னாள் இங்கிலாந்து வீரர் அண்ட்ரூ ப்ளிண்டொப் ஆகிள இருவரினதும் பெயர்கள் இருப்பதாக இங்கிலாந்தின் டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதில் இங்கிலாந்து ஒருநாள், T20i அணிகளின் ஜொஸ் பட்லரே தொடர்ந்தும் தலைவராக செயல்படவுள்ள நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இயக்குநராகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றுகின்ற குமார் சங்கக்காரவை இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படலாம் என டெலிகிராவ் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2021 முதல் குமார் சங்கக்கார ராஜஸ்தான் ரோயல்ஸின் கிரிக்கெட் இயக்குநராக பணியாற்றுகின்றார். அந்த காலத்திலேயே ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிவரை சென்றது என குறிப்பிட்டுள்ள டெலிகிராவ், இக்காலப்பகுதியில் ஜோஸ் பட்லர் குமார் சங்கக்காரவின் வழிகாட்டுதல்களின் கீழ் முக்கியமான வீரராக மாறியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியிலும் இந்த பந்தம் தொடரலாம் எனவும் டெலிகிராவ் தெரிவித்துள்ளது. 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<