சமரியின் சாதனை சதத்துடன் மலேசியாவை வீழ்த்தியது இலங்கை

WOMEN’S T20 ASIA CUP

1
WOMEN’S T20 ASIA CUP

சமரி அத்தபத்துவின் சாதனை சதத்தின் உதவியுடன் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (22) நடைபெற்ற மகளிருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 7ஆவது போட்டியில், மலேசியா அணியை 114 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி புதிய சாதனை படைத்தது.

இதன் மூலம். மகளிருக்கான சர்வதேச T20i போட்டியில் இலங்கை மகளிர் அணி அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய போட்டியாக இது வரலாற்றில் இடம்பிடித்தது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணிக்காக வேகமான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட சமரி அத்தபத்து, 69 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 14 பௌண்டறிகளுடன் விக்கெட் இழப்பின்றி 119 ஓட்டங்களைப் பெற்றார், இது சமரியின் 3ஆவது T20i சதமாகும்.

அத்துடன், மகளிருக்கான ஆசியக் கிண்ண T20 போட்டிகள் வரலாற்றில் முதல் சதத்தைப் பூர்த்தி செய்த முதலாவது வீராங்கனையாக இடம்பிடித்த சமரி, மகளிருக்கான T20i போட்டிகளில் தனது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையும் பதிவு செய்தார். அதேபோல, T20i போட்டிகளில் இலங்கை மண்ணில் அவர் பதிவு செய்த முதலாவது சதமாகவும் இது இடம்பிடித்தது.

பங்களாதேஷ் அணியுடனான முதல் போட்டியில் அரைச் சதமடித்து அசத்திய விஷ்மி குணரத்ன இந்தப் போட்டியில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தாலும், ஹர்ஷிதா சமரவிக்ரமவுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 51 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த சமரி, தொடர்ந்து வந்த அனுஷ்கா சஞ்சீவனியுடன் ஜோடி சேர்ந்து 62 பந்துகளில் 115 ஓட்டங்களை இணைப்பாட்டமாக எடுத்து இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

24 பந்துகளை எதிர்கொண்ட அனுஷ்கா சஞ்சீவனி 4 பௌண்டறிகளுடன் 31 ஓட்டங்களைக் குவித்து தனது இன்னிங்ஸை அலங்கரித்தார் அதேபோல, 23 பந்துகளில் 26 ஓட்டங்களை எடுத்த ஹர்ஷிதாவின் இன்னிங்ஸில் 5 பௌண்டறிகள் அடங்கும்.

எவ்வாறாயினும், இலங்கை அணியின் இன்னிங்ஸில் கடைசி இரண்டு பந்துகளில் அனுஷ்கா மற்றும் கவீஷா டில்ஹாரி ஆகியோரின் விக்கெட்டுகளை வினிஃப்ரெட் துரைசிங்கம் கைப்பற்றியிருந்தார்.

185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மலேசிய மகளிர் அணியை 19.5 ஓவர்கள் முடிவில் 40 ஓட்டங்களுக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். அதிலும் குறிப்பாக எல்ஸா ஹண்டர் 10 ஓட்டங்களை எடுத்ததைத் தவிர்த்து மற்ற எந்தவொரு வீராங்கனையும் இரட்டை இலக்க ஓட்டங்களை எட்டவில்லை.

இலங்கை அணி சார்பில் திறமையாக பந்துவீசிய சஷினி கிம்ஹானி 4 ஓவர்கள் பந்துவீசி 09 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்கு உறுதுணையாக இருந்த கவீஷா டில்ஹாரி, காவ்யா கவிந்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியில் சதமடித்து அசத்திய சமரி அத்தபத்து ஆட்டநாயகி விருதை வென்றார்.

இந்த வெற்றியுடன் இலங்கை மகளிர் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று B குழுவில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இலங்கை அணி தமது கடைசி லீக் போட்டியில் நாளை மறுதினம் (24) தாய்லாந்து மகளிர் அணியை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<