இலங்கை வரும் இந்திய அணிக்கு புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளர்

India Tour Of Sri Lanka 2024

196
Sairaj Bahutule

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து T20i மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ள இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் சாய்ராஜ் பகுதுலே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இந்த வாரம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று T20i மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் காம்பீரின் பயணம் வரும் இலங்கை தொடரில் இருந்துதான் ஆரம்பமாக உள்ளது.

முன்னதாக தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்த சமயத்தில், அவருடன் இணைந்து பணியாற்றிய உதவிப் பயிற்சியாளர்களின் பதவிக்காலமும் முடிவடைந்தது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரருமான மோர்னே மோர்க்கலை பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று கம்பீர் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டுப் பயிற்சியாளர்களை பிசிசிஐ நியமிக்கவில்லை. இதனால் இது குறித்து முடிவெடுக்க பிசிசிஐ நேரம் தாழ்த்தியது. இந்த நிலையில் கம்பீரின் கோரிக்கைக்கு அமைய மோர்னே மோர்க்கல்லை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

39 வயதான அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதன்பிறகு, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் அவர் கடந்த ஆண்டு வரை பணியாற்றி இருந்தார்.

இதனிடையே, கம்பிருடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒன்றாக மோர்னே மோர்க்கல் விளையாடிய நிலையில் தற்போது அவர் பயிற்சியாளராக வர பிசிசிஐ ஒப்புக்கொண்டு விட்டது. எனினும், இலங்கைத் தொடரில் அவர் பயிற்சியாளராக இணைந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக மோர்னி மோர்கல் இலங்கை சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ள மாட்டார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்;ளது. மறுபுறத்தில் இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக மோர்னி மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளதாக எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் இலங்கை தொடருக்கான இந்திய அணியின் இடைக்காலப் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சு சகலதுறை வீரரான சாய்ராஜ் பகுதுலே நியமிக்கப்பட்டுள்ளார்.

51 வயதான இவர் இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் (1997-2003) விளையாடி உள்ளார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் கடந்த 3 ஆண்டுகளாக பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கௌதம் கம்பீர் ஆலோசனைகை;கு அமைய இலங்கை சுற்றுப்பயணத்தில் உதவிப் பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் டென் டெஸ்காட் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ராகுல் டிராவிட்டுடன் பணியாற்றிய டி. திலீப் களத்தடுப்பு பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<