இலங்கை வரும் இந்திய T20I மற்றும் ஒருநாள் குழாம்கள் அறிவிப்பு

India tour of Sri Lanka 2024

162
India tour of Sri Lanka 2024

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் T20I குழாம்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது இங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடுகின்றது.

>>ஜப்னாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கோல் மார்வல்ஸ்!

இந்த சுற்றுப்பயணத்தில் முதல் கட்டமாக அடுத்த வாரம் இரு அணிகளுக்கும் இடையிலான T20I தொடர் நடைபெறவுள்ளதோடு, அதன் பின்னர் ஒருநாள் தொடர் நடைபெறுகின்றது.

கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் சுற்றுப்பயணமாக இலங்கை தொடர் அமைந்திருக்கின்றது.

இந்த நிலையில், இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்திய T20I அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ் பெயரிடப்பட்டிருக்கின்றார். அதேவேளை ஜிம்பாப்வே சுற்றுத் தொடரில் இந்திய அணியினை வழிநடாத்திய சுப்மான் கில்லுக்கு ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் பிரதி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

மறுமுனையில் இலங்கை சுற்றுப் பயணத்தின் போது ஹார்திக் பாண்டியா T20 போட்டிகளில் மாத்திரமே ஆடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு அவருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் ஜஸ்பிரிட் பும்ராவிற்கு இலங்கை சுற்றுப் பயணத்தில் முழுமையாக ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன் அனுபவ நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹிட் சர்மா இலங்கை சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரில் ஆடுவதில் சந்தேகம் நிலவி வந்த நிலையில் அவர்கள் இருவரும் இலங்கை தொடரில் இணைக்கப்பட்டிருப்பதோடு, இவர்களில் ரோஹிட் சர்மா இந்திய ஒருநாள் அணியினை தலைவராக வழிநடாத்துகின்றார்.

அதேவேளை T20 உலகக் கிண்ணத்தில் வாய்ப்பினை பெறாத கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய வீரர்கள் இலங்கை சுற்றுப் பயணத்தில் ஒருநாள் போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

>>இலங்கை – நியூசிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

மறுமுனையில் அணியின் பந்துவீச்சுத்துறையினை நோக்கும் போது அக்ஷார் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பிரதான சுழல்வீரர்களாகவும் மொஹமட் சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் கலீல் அஹ்மட் ஆகியோர் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களாகவும் இலங்கை தொடரில் காணப்படுகின்றனர்.

இலங்கை இந்திய அணிகள் இடையிலான T20I தொடர் இம்மாதம் 27ஆம் திகதி பல்லேகலயில் ஆரம்பமாகுவதோடு, அதன் பின்னர் ஒருநாள் தொடர் கொழும்பில் நடைபெறவிருக்கின்றது.

இந்திய T20I அணி

 

சூர்யகுமார் யாதவ் (தலைவர்), சுப்மான் கில் (பிரதி தலைவர்), யஷாஷ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், றியான் பராக், ரிசாப் பாண்ட், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, சிவம் தூபே, அக்ஷார் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அஹ்மட், மொஹமட் சிராஜ்

இந்திய ஒருநாள் அணி

 

ரோஹிட் சர்மா (தலைவர்), சுப்மான் கில் (பிரதி தலைவர்), விராட் கோலி, கே.எல். ராகுல், ரிசாப் பாண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், சிவம் தூபே, குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், றியான் பராக், அக்ஷார் பட்டேல், கலீல் அஹ்மட், ஹர்சித் ரனா

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<