லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஆடி வருகின்ற கோல் மார்வல்ஸ் அணிக்காக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மிலான் ரத்நாயக்க மற்றும் நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டஃபி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் முறையே இலங்கை வீரர் லஹிரு குமார மற்றும் ஜிம்பாப்வே வீரர் சீன் வில்லியம்ஸ் ஆகிய இருவருக்கும் பதிலாக கோல் அணியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
இலங்கையின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமார காயத்திலிருந்து இதுவரை குணமடையவில்லை. அதேபோல சீன் வில்லியம்ஸ் கடவுச்சீட்டு பிரச்சினையால் இலங்கைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த 2 வீரர்களுக்கும் பதிலாக மாற்று வீரர்கள் இருவரை ஒப்பந்தம் செய்ய கோல் மார்வல்ஸ் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
- கோல் மார்வல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முன்னணி வீரர்கள்!
- அடுத்தடுத்த வெற்றிகளுடன் முன்னேறும் கோல் மார்வல்ஸ்
- தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ள ஜப்னா கிங்ஸ்
27 வயதான மிலான் ரத்நாயக்க, இன்னும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. எனினும், உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடி வருகின்ற இவர், 22 முதல்தர T20i போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நியூசிலாந்துக்காக 14 T20i சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள 29 வயதான ஜேக்கப் டஃபி, 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இறுதியாக இவர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான T20i தொடரிலும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை எல்பிஎல் தொடரில் நிரோஷன் டிக்வெல்ல தலைமையில் ஆடி வருகின்ற கோல் மார்வல்ஸ் அணி, இதுவரை 3 போட்டிகளில் ஆடி 2இல் வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<