கோல் மார்வல்ஸ் அணியின் தலைவராகும் திக்வெல்ல

Lanka Premier League 2024

154

இலங்கை கிரிக்கெட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐந்தாவது லங்கா பிரீமியர் லீக் தொடரில் களமிறங்கும் கோல் மார்வல்ஸ் அணியின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். 

கோல் மார்வல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிரஹம் ஃபோர்ட் மற்றும் அணி உரிமையாளர் பிரேம் தக்கர் தலைமையிலான கோல் மாவெல்ஸ் நிர்வாகம் அணிக்கு பொருத்தமான, திறமையான தலைவர் ஒருவரை நியமிப்பதற்கான வேலைகளை முன்னெடுத்துள்ளனர். இறுதியில் நிரோஷன் திக்வெல்லவின் திறமை மற்றும் அவரது கிரிக்கெட் அனுபவம், அறிவின் மீது நம்பிக்கை வைத்து இம்முறை LPL தொடரில் கோல் மாவல்ஸ் அணியை வழிநடத்தும் வாய்ப்பை வழங்கியுள்ளனர் 

இந்த நிலையில், கோல் மார்வல்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டது தொடர்பில் நிரோஷன் திக்வெல்ல கருத்து தெரிவிக்கையில்,   

கோல் மார்வல்ஸ் அணியை வழிநடத்துவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியமாகும். இம்முறை LPL தொடரில் இந்த திறமையான குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கவும், எங்கள் இலக்குகளை அடைய இடைவிடாமல் உழைக்கவும் நான் ஆர்வமாக உள்ளேன். நிர்வாகத்தின் ஆதரவு மற்றும் அணியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன், நாங்கள் எங்கள் ரசிகர்களை பெருமைப்படுத்துவோம் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்

இதனிடையே, நிரோஷன் திக்வெல்லவை கோல் மார்வல்ஸ் அணியின் தலைவராகக் கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்என்று தலைமைப் பயிற்சியாளர் கிரஹாம் ஃபோர்ட் தெரிவித்தார். அவரது அனுபவமும், தலைமைத்துவமும் கோல் மார்வல்ஸ் அணியின் வளர்ச்சிக்கு கட்டாயம் தேவை. இம்முறை போட்டித் தொடரில் அவர் அணியை அதிசிறந்த திறமைகளை வெளிப்படுத்த ஊக்குவித்து எங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார் 

இம்முறை LPL தொடரில் மஹீ தீக்ஷன, அலெக்ஸ் ஹேல்ஸ், பானுக ராஜபக்ஷ, டிம் சீஃபர்ட் மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் கோல் மார்வல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளதால் கோல் மாவல்ஸ் அணியை வெற்றி பெற செய்வதற்கு அது நிரோஷன் திக்வெல்லவிற்கு மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

31 வயதான நிரோஷன் திக்வெல்ல, இதுவரை 28 T20i போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனிடையே, 2020இல் நடைபெற்ற அங்குரார்ப்பண LPL தொடரில் தம்புள்ள அணிக்காக ஆடிய அவர், இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற LPL தொடரில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

ஐந்தாவது லங்கா பிரீமியர் லீக் அத்தியாயம் கோல் மார்வல்ஸ் அணிக்கும் கண்டி பெல்கன்ஸ் அணிக்கும் இடையில் பல்லேகலையில் ஜூலை 1ஆம் திகதி நடைபெறும் போட்டியுடன் ஆரம்பமாகிறது. 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<