அயர்லாந்து – ஐக்கிய அமெரிக்க அணிகள் இடையிலான 2024ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணப் போட்டி மழை காரணமாக கைவிட்டப்பட்டதனை அடுத்து, குழு A அணிகளில் ஒன்றான பாகிஸ்தான் T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து முதல் சுற்றுடன் வெளியேறியிருக்கின்றது.
>>இந்திய சகலதுறை வீரருக்கு கணுக்கால் அறுவை சிகிச்சை<<
முன்னாள் T20 உலகக் கிண்ண சம்பியன்களான பாகிஸ்தான் தமது முதல் இரண்டு போட்டிகளிலும் முறையே ஐக்கிய அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுடன் தோல்வியினைத் தழுவியிருந்தது. இந்த நிலையில் தமது மூன்றாவது போட்டியில் அவ்வணியானது கனடாவுடன் வெற்றியினைப் பதிவு செய்த நிலையில், பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகளுடன் சுப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு காணப்பட்டது.
பாகிஸ்தான் சுப்பர் 8 சுற்றுக்கு செல்ல வேண்டுமெனில் அவ்வணி தமக்கு எஞ்சியிருந்த போட்டியில் அயர்லாந்துடன் கட்டாய வெற்றியினைப் பதிவு செய்வதோடு, ஐக்கிய அமெரிக்க அணி தமக்கு எஞ்சியிருந்த போட்டியில் மோசமான நிகர் ஓட்ட வீதத்துடன் (NRR) அயர்லாந்துடன் தோல்வியினைத் தழுவ வேண்டும் என்கிற நிலை காணப்பட்டிருந்தது.
எனினும் ஏற்கனவே தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் காணப்பட்டிருந்த ஐக்கிய அமெரிக்க அணி ப்ளோரிடாவில் விளையாடவிருந்த போட்டி, மழை காரணமாக கைவிட்டப்பட்டதனை அடுத்து ஐக்கிய அமெரிக்க மேலதிகமாக ஒரு புள்ளியினைப் பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்கின்றது.
இதனால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பினை இழக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் பாகிஸ்தான் அணியானது T20 உலகக் கிண்ணத் தொடரில் அடுத்ததாக ஆடும் போட்டி நாளை (16) அயர்லாந்து அணியுடன் இடம்பெறுகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<