காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் ஷர்துல் தாகூருக்கு நேற்று (12) வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூருக்கு இந்த ஆண்டின் முற்பகுதியில் நடைபெற்ற தென்னாபிரிக்கா தொடரின் போது வலது காலில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை மேற்கொண்டு காயத்தை பொருட்படுத்தாது ரஞ்சி கிண்ணத்தில் மும்பை அணிக்காக ஆடிய அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், 42ஆவது முறையாக அந்த அணிக்கு சம்பியன் பட்டம் வென்று கொடுக்க முக்கிய பங்கு வகித்தார்.
அதேபோல, அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். குறித்த தொடரின் போது கணுக்கால் வலியால் அவதிப்பட்ட அவர் தடுப்பூசி மூலம் வலி நிவாரணி எடுத்துக் கொண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்றார்.
ஐபிஎல் முடிவடைந்த நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர். இதையடுத்து லண்டன் சென்ற ஷர்துல் தாகூருக்கு அங்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதற்கு முன்பு இந்திய அணியின் மற்றுமொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமிக்கும் லண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனவே மொஹமட் ஷமிக்கு அறுவை சிகிச்சை செய்த அதே மருத்துவர் தான் ஷர்துல் தாகூருக்கும் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- அனைத்துவகை போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்ற தினேஷ் கார்த்திக்!
- ‘இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறேன்’ – கௌதம் கம்பீர்
- பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கவில்லை – ராகுல் டிராவிட்
இந்த நிலையில், ஷர்துல் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ”அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, அடுத்த 8 வாரத்திற்குள் எழுந்து நடமாடுவேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்திய உள்ளூர் போட்டிகள் அடுத்த 3 மாதங்களில் ஆரம்பமாக உள்ளதால் அதில் ஷர்துல் தாகூர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், அவருக்கு 3 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் உள்ளூர் போட்டிகளில் ஆடுவாரா என்பது கேள்விக்குரியாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய ஷர்துல் தாகூர் அதன் பிறகு இந்திய அணிக்காக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<