சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்குமா இலங்கை?

ICC Men's T20 World Cup 2024

510

விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி 2024 T20 உலகக் கிண்ணத்தில் விளையாடி வரும் முன்னாள் சம்பியனான இலங்கையின் சுப்பர் 8 சுற்று கனவு பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளது.   

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வரும் ஒன்பதாவது ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் இன்று அதிகாலை நடைபெறவிருந்த 23ஆவது லீக் போட்டியில் D குழுவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் நேபாளம்; அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன. 

நடப்பு T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய நிலையில், நேபாளம் அணியும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. மேலும் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற இவ்விரு அணிக்கும் இந்த போட்டியானது முக்கியமானதாக பார்க்கப்பட்டது 

புளோரிடா, லௌடர்ஹில் சென்ட்ரல் ப்ரோவார்ட் ரீஜினல் பார்க் விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த இந்தப் போட்டியானால் மழை காரணமாக தடைப்பட்டது. அதன்பின், முழு நாளும் கடும் மழை பெய்ததால் சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் ஆட்டம் கைவிடப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் மட்டுமே சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், போட்டி நடைபெற இருந்த புளோரிடாவில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் போட்டியானது கைவிடப்பட்டது. 

இதனால் இலங்கை அணியின் சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பு ஏறத்தாழ முடிவுக்கு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் D குழுவில் தென்னாபிரிக்கா, நெதர்லாந்து, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய அணிகளுடன் இடம்பிடித்துள்ள இலங்கை அணியானது, தாம் விளையாடிய 3 போட்டிகளில் இரண்டில் தோல்வி, ஒரு போட்டி முடிவில்லை என புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது 

ஏற்கெனவே இந்தக் குழுவில் தென்னாபிரிக்கா அணியானது விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை முதல் அணியாக உறுதிசெய்த நிலையில், பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் இலங்கை அணி எஞ்சியுள்ள போட்டியில் வெற்றிபெற்றாலும் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவது என்பது சாத்திய மற்றது என்றே கருதப்படுவதால், அந்த அணியின் உலகக்; கிண்ணாப் பயணமும் முடிவுக்கு வந்துள்ளது. 

இலங்கை அணி சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நாளை (13) நடைபெறவுள்ள 27ஆவது போட்டி மழையால் கைவிடப்பட வேண்டும். அத்தோடு, தென்னாபிரிக்கா அணி மிகப் பெரிய ஓட்ட வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்த வேண்டும். நேபாளம் அணி பங்களாதேஷ் அணியை மிகச் சிறிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி கொள்ள வேண்டும்.       

அத்தோடு, இலங்கை தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இது நடந்தால் மட்டுமே இலங்கை அணியால் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும். 

மறுபுறத்தில் ஒரு புள்ளியுடன் 4ஆவது இடத்தில் உள்ள நேபாளம் அணியை (-0.539) விட இலங்கையின் நிகர ஓட்ட விகிதம் (-0.777) குறைவாக உள்ளது. தற்போதைய நிலையில் இலங்கை அணி சுப்பர் 8 சுற்றுக்கு செல்ல தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்த வேண்டும். ஆனாலும் மற்ற 4 அணிகளை விட நிகர ஓட்ட விகிதம் குறைவாக இருப்பதால் நெதர்லாந்தை வீழ்த்தினாலும் இலங்கை அணி சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற 99 சதவீத வாய்ப்பில்லை. 

ஒட்டுமொத்தத்தில் இலங்கை அணியின் T20 உலகக் கிண்ண கனவு முதல் சுற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி இதுவரை ஒரு வெற்றி கூட பெறவில்லை. கடைசியாக நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி சென்.லூசியாவில் உள்ள டெரன் சமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<