சம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஷ்!

IPL 2024

156
IPL 2024

இந்தியாவில் நடைபெற்றுவந்த IPL தொடரின் சம்பியனாக ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணி முடிசூடியுள்ளது.

பதினேழாவது பருவகாலமாக நடைபெற்ற இந்த IPL தொடரில் முதல் குவாலிபையர் போட்டியில் வெற்றிபெற்று கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.

>>T20 உலகக் கிண்ணத்திலிருந்து ஜேசன் ஹோல்டர் திடீர் விலகல்<<

இந்தநிலையில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வியடைந்தாலும், இரண்டாவது குவாலிபையரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்ற கொல்கத்தா அணி சம்பியன் பட்டத்தை மூன்றாவது தடவையாக வெற்றிக்கொண்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி வெறும் 113 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா அணி சார்பாக பந்துவீசிய அனைத்து வீரர்களும் குறைந்தது ஒரு விக்கெட்டை வீழ்த்த மோசமான துடுப்பாட்டத்தை ஹைதராபாத் வீரர்கள் வெளிப்படுத்தினர்.

ஹைதரபாத் அணி சார்பாக அதிகபட்சமாக பெட் கம்மின்ஸ் 24 ஓட்டங்களையும், எய்டன் மர்க்ரம் 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அன்ரே ரசல் 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகிய வீரர்கள் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியின் முதல் விக்கெட்டாக சுனில் நரைன் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.

>>லங்கா பிரீமியர் லீக் தொடரின் விளம்பர தூதுவராக அவுஸ்திரேலிய நட்சத்திரம்<<

வெங்கடேஷ் ஐயர் வேகமாக துடுப்பெடுத்தாடி 26 பந்துகளில் 52 ஓட்டங்களையும், குர்பாஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள வெறும் 10.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து கொல்கத்தா அணி போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாக முடிசூடியது.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக அபிஷேக் சர்மா மற்றும் ராஹுல் ட்ரிபாதி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய மிச்சல் ஸ்டார்க் தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடர் ஆட்டநாயகனாக சுனில் நரைன் தெரிவுசெய்யப்பட்டார்.

சுருக்கம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – 113 (18.3) பெட் கம்மின்ஸ் 24, எய்டன் மர்க்ரம் 20, அன்ரே ரசல் 3/19, மிச்சல் ஸ்டார்க் 2/19, ஹர்சித் ராணா 2/24

கொல்கத்தா நைட் ரைடர்ஷ் – 114/2 (10.3) வெங்கடேஷ் ஐயர் 52*, ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் 39

 

முடிவு – கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<