T20 உலகக் கிண்ணத்திலிருந்து ஜேசன் ஹோல்டர் திடீர் விலகல்

ICC Men's T20 World Cup

190
ICC Men's T20 World Cup

காயம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டர் எதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இதனால் அவருக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒபேத் மெக்காய் அணியில் இணைத்துக் கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்;ளது.

ஐசிசியின் T20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் 4 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆடவுள்ள பெரும்பாலான அணிகள் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவிற்குச் சென்று பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், நடப்பு T20 உலகக் கிண்ணத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பிடித்த சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி நான்கு நாள் கிரிக்கெட் போட்டியின் போது ஹோல்டருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இம்முறை கவுண்டி போட்டியில் வொர்செஸ்டர்ஷையர் அணியை அவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இதனிடையே, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ஜேசன் ஹோல்டரின் காயம் குணமடைய எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்த தகவல்கள் குறிப்பிடப்படவில்லை.

எனவே, காயக்குள்ளாகிய ஹோல்டருக்குப் பதிலாக T20 உலகக் கிண்ணத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஒபேத் மெக்காய் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று நிறைவுக்கு வந்த தென்னாபிரிக்கா அணியுடனான 3 போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடிய அவர், முதல் போட்டியில் 2 விக்கெட்டுகளையும், 3ஆவது போட்டியில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், காயம் மற்றும் உபாதைகளை கருத்திற் கொண்டு இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடருக்காக கைல் மேயர்ஸ், மெத்யூ போர்ட்;, ஃபேபியன் ஆலன், ஹேடன் வோல்ஷ் மற்றும் ஆண்ட்ரே பிளெட்சர் ஆகிய ஐந்து பேரையும் மேலதிக வீரர்களாக பரிந்துரைக்க மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இம்முறை T20 உலகக் கிண்ணத்தை நடத்தும் வரவேற்பு நாடுகளில் ஒன்றான மேற்கிந்தியத் தீவுகள் அணி எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி நடைபெறும் தனது முதல் போட்டியில் பப்புவா நியூ கினியாவை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<