2024 LPL வீரர்கள் ஏலம் குறித்த புதிய அறிவிப்பு

Lanka Premier League 2024

224
Lanka Premier League 2024

2024ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் வீரர்கள் ஏலம் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இம்முறை போட்டித் தொடர் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போல இம்முறையும் LPL வீரர்கள் ஏலத்தினை இந்தியாவின் பிரபல்யமிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான சாரு ஷர்மா தொகுத்து வழங்கவுள்ளார்.

18 சுற்றுகளைக் கொண்ட இம்முறை LPL வீரர்கள் ஏலத்தில் 420 பேர் பங்கொடுக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதில் 154 வீரர்கள் இலங்கை வீரர்கள் என்றும், எஞ்சியுள்ள 266 வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இம்முறை LPL தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்திருந்த போதிலும், 266 வீரர்களே தெரிவு செய்யப்பட்டதாக LPL தொடரின் பணிப்பாளர் சமன்த தொடங்வெல கொழும்பில் இன்று (17) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் சுமார் 140 உள்ளூர் வீரர்களின் பெயர் பட்டியலை வழங்கியுள்ளதாகவும், ஒவ்வொரு பிரதான கழகங்களுக்கும் தலா 2 வீரர்களை ஏலத்தில் களமிறக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 420 வீரர்கள் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், நண்பகல் 12.00 மணிக்கு ஏலம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

3 அணிகளின் உரிமையாளர்கள் வெளியேற்றம்

இம்முறை LPL தொடரில் கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ், தம்புள்ள தண்டர்ஸ், கோல் மாவல்ஸ், ஜப்னா கிங்ஸ் ஆகிய அணிகளும் விளையாடவுள்ளன.

இதில் இலங்கை கிரிக்கெட் சபை வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறியதன் காரணமாக இரண்டு அணிகளின் உரிமையாளர்கள் நீக்கப்பட்டதாக LPL தொடரின் பணிப்பாளர் சமன்த தொடங்வெல தெரிவித்தார்.

இதன்படி, காலி மற்றும் தம்புள்ளை ஆகிய 2 அணிகளும் இம்முறை LPL தொடரில் இரண்டு புதிய உரிமையாளர்களின் கீழ் களமிறங்கவுள்ளதாகவும், கண்டி அணியின் உரிமையில் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் சபையின் வழிகாட்டுதல்களுக்கு கட்டுப்படத் தவறியதால் நடப்பு சம்பியன் கண்டி (பி-லவ் கண்டி) அணியின் உரிமையாளர் நீக்கப்பட்டுள்ளதாகவும், கண்டி அணியின் உரிமையை வழங்குவதற்கு தற்போது மூன்று தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும், அதற்கான பணிகள் விரைவில் நிறைவடையும் எனவும் தொடங்வெல தெரிவித்தார்.

கண்டி அணிக்கான உரிமையாளர் உறுதிசெய்யப்பட்ட பின்னர் கண்டி அணியின் பெயர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வீரர்களை வாங்க 30 கோடி

அணி உரிமையாளர்களுக்கு தங்கள் அணியில் கடந்த ஆண்டு வீரர்களிடமிருந்து 6 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். அதேபோல, ஏலத்திற்கு முன் நேரடியாக வீரர்களை ஒப்பந்தம் செய்யவும் வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு முறைகளிலும் ஒரு அணியில் இருக்கக்கூடிய அதிகபட்ச வீரர்களின் எண்ணிக்கை 6 ஆகும். எனவே, அந்த வீரர்களுக்கான விலையைக் கழித்து மீதமுள்ள தொகையைக் கொண்டே மற்றைய வீரர்களை ஏலத்தில் வாங்க முடிவும்.

வீரர் ஏலத்தில், ஒரு அணி வீரர்களை வாங்க 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை (15 கோடி ரூபா) செலவிடலாம், அதேபோல, ஏலத்திற்கு முன் நேரடியாக வீரர்களை ஒப்பந்தம் செய்யவும் 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் மாத்திரம் தான் செலவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்திற்கு முன் வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்ய கொடுத்த பணம் எஞ்சியிருந்தால், அந்தப் பணத்தை ஏலத்தில் பயன்படுத்த முடியாது.

மேலும், கடந்த ஆண்டு விளையாடிய ஒரு வீரர் அல்லது வீரர்களை அணியில் தக்கவைத்துக்கொள்ள ஒரு அணி முடிவு செய்தால், அந்த அணிக்கு ஏலத்தில் செலவழிக்க கிடைக்கும் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களில் இருந்து அந்த வீரரின் மதிப்பு குறைக்கப்படும். மீதமுள்ள பணத்தை தான் அந்த அணி ஏலத்தில் செலவிடலாம்.

இம்முறை LPL தொடரில் வீரர்களுக்கான முழு ஏலத் தொகை 75 கோடியே 25 இலட்சத்து 10,750 ரூபாவாகும். (25 இலட்சம் அமெ. டொலர்கள்).

புதிய LPL அணி?

இம்முறை LPL தொடர் ஆர்பமாகியதில் இருந்து, ஐந்து அணிகள் மட்டுமே விளையாடி வருகின்றன, மேலும் ஒரு புதிய அணியை இணைத்துக் கொள்வது குறித்து ஒவ்வொரு ஆண்டும் போல விவாதங்கள் நடந்தன.

இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டதுடன், அதற்கு LPL தொடரின் பணிப்பாளர் சமன்த தொடங்வெல பதிலளிக்கையில்,

LPL தொடரில் மேலும் ஒரு அணியை இணைத்தால் அது போட்டியின் தரம் குறைவதற்கு காரணமாக அமையும் என தெரிவித்தார். குறிப்பாக, திறமையான வீரர்கள் பல அணிகளில் பிரிந்து ஆடுவதால் அது போட்டித் தன்மையை பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், LPL தொடரில் புதிய அணியை இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பார்வையாளர்களுக்கு நற் செய்தி

கண்டி பல்லேகல மைதானத்தில் இரவு நேரப் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் முறையான போக்குவரத்து வசதிகள் இன்மையால் கண்டிக்கு வரும் பார்வையாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுக்க இம்முறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, இரவு நேரங்களில் மைதானத்தில் இருந்து கண்டிக்கு சுமார் 10 மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, முதலில் பெண்களுக்கான T10 லீக் தொடர் நடத்தப்படும் எனவும், அதன் பின்னர் பெண்களுக்கான LPL தொடர் நடத்தப்படும் எனவும் சமன்த தொடங்வெல தெரிவித்தார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<