மத்திய ஆசிய கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் ஆரம்ப சுற்றுப் போட்டியில், பலம் வாய்ந்த ஈரானுக்கு எதிராக நேற்று (15) நடைபெற்ற போட்டியில் 3-0 என்ற நேர் செட்கள் அடிப்படையில் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
சர்வதேச கரப்பந்hhட்டப் போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி முதல் தடவையாக ஈரான் அணியை வீழ்த்தியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
போட்டியின் ஆரம்பம் முதலே எதிரணியான ஈரான் அணிக்கு பலத்த போட்டியைக் கொடுத்த இலங்கை வீரர்கள், போட்டியின் முதல் செட்டில் 25-22 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை 25-17 எனவும், 3ஆவது செட்டை 25-21 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் வெற்றி கொண்ட இலங்கை அணி, 3-0 நேர் செட்கள் அடிப்படையில் வெற்றியீட்டியது.
தற்போதைய உலக கரப்பந்தாட்ட தரவரிசையின்படி இலங்கை அணி 60ஆவது இடத்தில் இருப்பதுடன், இலங்கையிடம் தோல்வியடைந்த ஈரான் அணி 15ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல, ஆசிய தரவரிசையில் ஈரான் 2ஆவது இடத்திலும், இலங்கை 14ஆவது இடத்திலும் உள்ளது.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை (13) நடைபெற்ற போட்டியிலும் 3 நேர் செட்களில் (25 – 19, 25 – 20, 25 – 14) இலங்கை வெற்றிபெற்றிருந்தது.
எவ்வாறாயினும் தனது முதல் இரண்டு போட்டிகளில் கிர்கிஸ்தானிடமும் பாகிஸ்தானிடமும் இலங்கை தோல்விகளைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின். இஸ்லாமாபத்தில் நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டித் தொடரில் இலங்கை தனது கடைசிப் லீக் போட்டியில் துர்க்மேனிஸ்தானை இன்று (16) எதிர்த்தாடவுள்ளது.
மேலும், 6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் முதல் சுற்றில் முன்னிலை வகிக்கும் இரு அணிகள் நாளை (17) நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<