ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தை பொருத்தவரை குறிப்பிடத்தக்க அளவிலான பாரிய மாற்றங்களை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்படுத்தவில்லை. அணியின் தலைவராக வனிந்து ஹஸரங்க மற்றும் உப தலைவராக சரித் அசலங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
>>U23 மகளிர் தேசிய சுப்பர் லீக் தொடருக்கான அட்டவணை, அணிகள் அறிவிப்பு<<
பிரகாசித்த வீரர்கள் அணியில் இடத்தை தக்கவைத்துள்ளனர். எனினும் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான குசல் பெரேராவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
தசுன் ஷானக அணியின் சகலதுறை வீரர்கள் பட்டியலில் வனிந்து ஹஸரங்கவுடன் இடத்தை பிடித்துக்கொண்டதுடன், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா மற்றும் துனித் வெல்லாலகே ஆகிய வீரர்களும் இறுதி 15 வீரர்களில் இடம்பெற்றுள்ளனர்.
துடுப்பாட்ட வரிசையை பொருத்தவரை பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்க மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எவ்வாறாயினும் இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்த பயிற்சி போட்டியில் அரைச்சதம் ஒன்றை பதிவுசெய்திருந்த பானுக ராஜபக்ஷவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் இவர் மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
வேகப்பந்துவீச்சாளர்களை பொருத்தவரை மதீஷ பதிரண, துஷ்மந்த சமீர, நுவான் துஷார மற்றும் டில்சான் மதுசங்க ஆகிய வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். முக்கிய வெளியேற்றமாக லஹிரு குமார, பிரமோத் மதுசான் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கு இறுதி குழாத்தில் வாய்ப்பளிக்கப்படவில்லை.
இதேவேளை மேலதிக வீரர்கள் பட்டியலில் தமிழ்பேசும் சுழல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார். இவர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் IPL தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகின்றார். இவருடன் ஜனித் லியனகே, பானுக ராஜபக்ஷ மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் மேலதிக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரில் D குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் ஜூன் 3ம் திகதி தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. இந்த குழுவில் பங்களாதேஷ், நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகளை இலங்கை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
வனிந்து ஹஸரங்க (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, துனித்
வெல்லாலகே, தசுன் ஷானக, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, மதீஷ பதிரண, டில்சான் மதுசங்க, நுவான் துஷார
மேலதிக வீரர்கள் – விஜயகாந்த் வியாஸ்காந்த், ஜனித் லியனகே, அசித பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<