றக்பி தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இலங்கை அணி

184
விளையாட்டு

ஆசிய றக்பி முதலாம் பிரிவு சம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை றக்பி அணி, உலக றக்பி புதிய தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது. 

இதன்படி, இலங்கை றக்பி அணி புதிய தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 41ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இறுதியாக 2018ஆம் ஆண்டு உலக றக்பி தரவரிசையில் இலங்கை அணி 40ஆவது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த காலத்தில் இலங்கை றக்பி சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக சர்வதேச றக்பி போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், தடை நீக்கப்பட்டதன் பின்னர் இலங்கை றக்பி அணி பங்குபற்றிய முதலாவது சர்வதேசப் போட்டி இதுவாகும். 

போட்டியின் அரையிறுதியில் இந்திய அணியை 45-10 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இலங்கை வீரர்கள், இறுதிப் போட்டியில் கஸகஸ்தான் அணியை 45-07 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றனர். 

இப்போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த கத்தார் அணி, புதிய தரவரிசையில் 90ஆவது இடத்தை எட்டியுள்ளது, இந்திய அணி இரண்டு இடங்கள் சரிந்து 89ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 

இதேவேளை, ஆசிய றக்பி முதலாம் பிரிவு சம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை றக்பி அணிக்கு 30 ஆயிரம் அமெரிக்க டொலரை (89 இலட்சம் ரூபா) இலங்கை கிரிக்கெட் சபை அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<