ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் ஒரே நாளில் இலங்கைக்கு 3 பதக்கங்கள்

21st Asian Junior Athletic Championship 2024

234

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் பொலிஸ் கழக விளையாட்டரங்கில் நடைபெற்ற 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் கடைசி நாளான நேற்று (27) இலங்கை ஒரு வெள்ளிப் பதக்கம் உட்பட 3 பதக்கங்களை வென்று அசத்தியது.  

இந்த 3 பதக்கங்களும் அஞ்சலோட்டப் போட்டிகளில் கிடைத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும் 

ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4×400 அஞ்சலோட்டப் போட்டிகள் இரண்டிலும் இலங்கைக்கு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன 

ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டப் போட்டியை 39.81 செக்கன்களில் நிறைவுசெய்து இலங்கை வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தது. இந்த நேரப் பெறுதியானது 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டதிற்கான புதிய இலங்கை சாதனையாகவும் பதிவாகியது. 

முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் நிலைநாட்டிய 40.32 செக்கன்கள் என்ற சாதனை இறுதிப் போட்டியில் வைத்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டமை மற்றுமொருது சிறப்பம்சமாகும் 

வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் கௌஷால் தமேல் (கந்தானை டி மெசெணன்ட் கல்லூரி), இந்துவர வீரரத்ன (மாத்தறை லீட்ஸ் சர்வதேச பாடசாலை), இந்துசர விதுஷான் (கொழும்பு ஆனந்தா கல்லூரி) மற்றும் மெரோன் விஜேசிங்க (கொழும்பு ஆனந்தா கல்லூரிஆகியோர் இடம்பிடித்திருந்தனர். 

அப் போட்டியில் ஹொங்கொங் அணி (39.67 செக்.) தங்கப் பதக்கத்தையும் இந்தியா அணி (40.01 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. 

கடும் போட்டித்தன்மையை ஏற்படுத்திய ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்டப் போட்டியை 3 நிமிடங்கள், 09.48 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியது 

வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் அவிஷ்க ராஜபக்ஷ (குருநாகல் மலியதேவ கல்லூரி), ஷசிந்த சில்வா (கந்தானை புனித. செபஸ்டியன்ஸ் கல்லூரி), ஹசிந்து நெத்சர (கொழும்பு லும்பினி கல்லூரி) மற்றும் ஜாத்ய கிருளு (காலி மஹிந்த கல்லூரி) ஆகியோர் இடம்பிடித்திருந்தனர் 

இந்தப் போட்டியில் தாய்லாந்து அணி (3:09.33 செக்.) தங்கப் பதக்கத்தையும், இந்தியா அணி (3:09.38 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தன. 

இதனிடையே, பெண்களுக்களுக்கான 4×400 அஞ்சலோட்டப் போட்டியை 3 நிமிடங்கள், 46.20 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது. வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் ப்ரவிந்தி துனுசிங்க (மலியதேவ பெண்கள் கல்லூரி), ஜித்மா விஜேதுங்க (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), சருனி ப்ரமுதிகா (கம்பஹா கன்னியாஸ்திரிகள் மடம்) மற்றும் நுஹன்சா கொடித்துவக்கு (மாத்தளை மத்திய கல்லூரி) ஆகியோர் இடம்பிடித்திருந்தனர் 

இந்தப் போட்டியில் இந்தியா அணி (3:41.50) தங்கப் பதக்கத்தையும், கஸக்ஸ்தான் அணி (3:45.71) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தன. 

இந்தப் போட்டித் தொடரின் முதல் நாளன்று பெண்களுக்கான முப்பாய்ச்சலில் நெத்மிகா மதுஷானி ஹேரத் (13.01 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், இரண்டாம் நாளன்று 4×400 மீற்றர் கலப்பு அஞ்சலோட்டத்தில் (3:28.18 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் இலங்கை அணி வென்றிருந்தது. 

இதன்படி, கடந்த 4 நாட்களாக நடைபெற்ற 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி 2 வெள்ளிப் பதக்கங்களையும், 3 வெண்கலப் பதக்கங்களையும் வென்று அசத்தியது 

>>மேலும்பலமெய்வல்லுனர்செய்திகளைப்படிக்க<<