இலங்கைக்காக ஆசிய விளையாட்டு விழாவில் முதல் தங்கம் வென்ற நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தன்னுடைய 89ஆவது அகவையில் காலமாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
>> 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற 20 வயது இலங்கை வீரர்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் உயரம் பாய்தல் விளையாட்டு நிகழ்விலேயே குறித்த தங்கப்பதக்கத்தினை வென்று கொடுத்ததோடு, அவர் ஆடவர் உயரம் பாய்தல் முன்னாள் தேசிய சாதனைக்கும் சொந்தக்காரராக திகழ்ந்திருக்கின்றார்.
எதிர்வீரசிங்கம் தனது முதல் தங்கப்பதக்கத்தினை 1958ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்றிருந்ததோடு, அதன் பின்னர் 1962ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு விழாவிலும் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தன்னுடைய 17 வயதில் 1952ஆம் ஆண்டு ஹெல்சின்கி ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்த எதிர்வீரசிங்கம் 1956ஆம் ஆண்டு மெல்பர்ன் ஒலிம்பிக்கிலும் பங்கேற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
விவசாயத்துறை பேராசிரியரான எதிர்வீரசிங்கம் தனது மறைவுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு மிக முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<