உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2024ஆம் ஆண்டிற்கான 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நாளை (22) ஆரம்பமாக உள்ளது. இம்முறை ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
இதனிடையே, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பமாவதற்கு முன் இந்திய அணியின் முன்னணி வீரர்களைப் போல பல வெளிநாட்டு வீரர்களும் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி வருவது ஒவ்வொரு அணிகளுக்கும் மிகப் பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட 6 வீரர்களில் நால்வர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரை தவறவிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன்படி, துஷ்மந்த சமிர, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுசங்க மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் காயங்களில் இருந்து முழுமையாக குணமடையாததால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை இழக்க நேரிடும் என அறியவருகின்றது.
இதில் குறிப்பாக, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நிறைவடைந்த ஓரிரு நாட்களில் ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளதால் காயங்களுக்கு உள்ளாகியுள்ள மற்றும் காயங்களில் இருந்து முழுமையாக குணமடையாத வீரர்களை இம்முறை ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதி வழங்காமல் இருக்க இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இணையும் துஷ்மன்த சமீர
- IPL தொடரிலிருந்து வெளியேறும் டில்சான் மதுசங்க
- RCB அணியின் பெயர், ஜெர்ஸி அதிரடி மாற்றம்
எவ்வாறாயினும், இம்முறை ஐபிஎல் தொடரில் இலங்கையில் இருந்து மஹீஷ் தீக்ஷன சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காகவும், நுவன் துஷார மும்கை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை காயத்தினால் தவறவிடவுள்ள இலங்கை வீரர்கள் யார் என்ற பட்டியலை பார்ப்போம்.
மதீஷ பத்திரன (சென்னை சுப்பர் கிங்ஸ்)
இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடிய மதீஷ பத்திரன, 3.4 ஓவர்கள் பந்துவீசி 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எனினும் துரதிஷ்டவசமாக அவர் குறித்த போட்டியில் தொடைப் பகுதியில் உபாதைக்குள்ளாகினார். இதனால் T20i தொடரை தீர்மானிக்கின்ற 3ஆவது போட்டியிலும் அவர் விளையாடவில்லை.
அவருக்கு காயம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவரை அணி நிர்வாகம் சேர்க்கவில்லை. 4 மதீஷவிற்கு ஏற்பட்டுள்ள உபாதை பாரதூரமான இல்லாவிட்டாலும், 3 முதல் 5 வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டுமென அறிவித்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, தற்பொழுது ஓய்வில் இருந்து வரும் அவர் ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டங்களில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய மதீஷ பத்திரன இல்லாதது சென்னை அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
டில்ஷான் மதுசங்க (மும்பை இந்தியன்ஸ்)
பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது 6 ஓவர்கள் மட்டுமே பந்து வீசிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுசங்க இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி வெளியேறியிருந்தார்.
இதனையடுத்து அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக எஞ்சியுள்ள கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும், இதற்கு அடுத்து நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் டில்ஷான் மதுசங்க விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
அண்மைக்காலமாக இலங்கை அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்ற இவரை, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4.60 கோடி ரூபாய்க்கு (இலங்கை பணப் பெறுமதியில் சுமார் 17 கோடி ரூபா) ஏலம் எடுத்தது.
துரதிர்ஷ்டவசமாக, ஐபிஎல் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பே அவருக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி டில்ஷான் மதுசங்க தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுசங்கவின் காயம் மிகவும் மோசமாக உள்ளதால் இம்முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்தது.
இந்த நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய டில்ஷான் மதுசங்கவிற்குப் பதிலாக தென்னாப்பிரிக்காவின் 17 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் க்வேனா மபாகாவை மும்பை இந்தியன்ஸ் அதிரடியாக ஒப்பந்தம் செய்திருக்கிறது. அவரை, அடிப்படை விலையான 50 இலட்சத்துக்கு மும்பை அணி எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வனிந்து ஹஸரங்க (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
பங்களாதே{டனான 3ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மத்தியஸ்தரின் தீர்ப்பை எதிர்த்து வாதிட்ட வனிந்து ஹசரங்க, தனது ஓவர் முடிவில் மத்தியஸ்தரிடம் இருந்து தனது தொப்பியை பறித்தெடுத்து அவரை கேலியும் செய்தார். இதன் காரணமாக வனிந்து ஹஸரங்கவுக்கு தகுதிநீக்கப் புள்ளிகள் வழங்கப்ப்ட்டு போட்டித் தடை விதிப்பது உறுதியாகி இருந்தது.
ஆனால், போட்டி முடிவடைந்த சொற்ப நேரத்தில் ஐசிசியினால் தண்டிக்கப்படுவதற்கு முன்னர் டெஸ்ட் ஓய்விலிருந்து மீள்வருகை தருவதாக வனிந்து ஹஸரங்க அறிவிக்க அவரது பெயர் இலங்கை டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டது.
மத்தியஸ்தருடன் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் ஐசிசியின் ஒழுக்கக் கோவையை மீறிய அவருக்கு 3 தகுதிநீக்கப் புள்ளிகளை ஐசிசி விதித்தது. இதன் காரணமாக 24 மாத காலப்பகுதியில் அவரது தகுதிநீக்கப் புள்ளிகள் 8ஆக உயர்ந்தது.
இதற்கு அமைய 2 டெஸ்ட் போட்டிகள் அல்லது 4 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அல்லது 4 T20i கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றில் எது முன்னதாக வருகிறதோ அவற்றில் விளையாட ஹஸரங்கவுக்கு ஐசிசி தடை விதித்தது.
இந் நிலையில் ஹசரங்கவுக்கு விதிக்கப்பட்ட தடை பங்களாதே{டனான டெஸ்ட் போட்டிகளில் அமுலுக்கு வந்தது. அவருக்கான தடையுடன் போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் இம்முறை ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வனிந்து ஹஸங்கவிற்கு ஐ.பி.எல். தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்தே விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால். ஐபிஎல் தொடரில் வனிந்து ஹஸரங்க விளையாடுவதில் மற்றுமொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் குதிகால் காயத்துடன் தான் அவர் விளையாடியது தற்போது தெரிய வந்துள்ளது. காயத்தின் வீரியம் பெரிதாக இல்லாவிட்டாலும் இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் ஆலோசனைக்கு அமைய T20 உலகக் கிண்ணத்தை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதியின் சில ஆட்டங்களில் வனிந்து ஹஸரங்க விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் வனிந்து ஹஸரங்க சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 1.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துஷ்மந்த சமீர (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
இம்முறை ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கஸ் அட்கின்சன், எதிர்வரும் T20 உலகக் கிண்ணத்தை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.
இதனால் அவருக்குப் பதிலாக மாற்றீடு வீராக இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீரவை 50 இலட்சம் ரூபா அடிப்படை விலைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.
எவ்வாறாயினும், கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் உபாதைக்குள்ளாகிய துஷ்மந்த சமீர, ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற T20i தொடரிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான T20i மற்றும் ஒருநாள் தொடரிலும் அவருக்கு ஓய்வளிக்க தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
தசை உபாதையில் இருந்து மீண்டு வரும் துஷ்மந்த சமீரவிற்கு T20 உலகக் கிண்ணத்தை கருத்தில் கொண்டு இம்முறை ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தேர்வாளர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி வழங்குவார்களா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இம்முறை ஐபிஎல் தொடரில் துஷ்மந்த சமீர ஆடா விட்டால் அவருக்கு மாற்றீடு வீரர் யார் என்பதையும் கொல்கத்தா அணி நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<