ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் பெதும் நிஸ்ஸங்க

ICC Men's Player Rankings

180

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) ஒருநாள் தரவரிசையில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.

சுற்றுலா இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர், ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் இடையிலான T20i தொடர் நிறைவடைந்த நிலையில், ஒருநாள் மற்றும் T20i போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று (20) வெளியிட்டது.

இந்தப் பட்டியலில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம் உட்பட 151 ஓட்டங்களைக் குவித்த இலங்கை அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க, ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன்படி, ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் தடவையாக அவர் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

மறுபுறம் ஒரு அரைச் சதம் உள்ளடங்கலாக 146 ஓட்டங்களைக் குவித்த இலங்கை அணியின் உதவித் தலைவர் சரித் அசலங்க இரண்டு இடங்கள் முன்னேறி 14ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் முதலிடத்திலும், இந்தியாவின் சுப்மன் கில் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான விராட் கோலி 3ஆம் இடத்தில் உள்ளார்.

ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தென்னாபிரிக்காவின் கேஷவ் மகராஜ் முதல் இடத்திலும், அவுஸ்திரேலிய வீரர்களான ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் அடெம் ஜம்பா ஆகிய இருவரும் முறையே 2ஆவது, 3ஆவது இடங்களில் உள்ளனர்.

ஒருநாள் சகலதுறை வீரர்கள் தரவரிசையில் மொஹமட் நபி (ஆப்கானிஸ்தான்) முதல் இடத்திலும், சகிப் அல் ஹசன் (பங்காளதேஷ்) 2ஆவது இடத்திலும், சிகந்தர் ராசா (ஜிம்பாப்வே) 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

இதனிடையே, இலங்கை T20i அணியின் தலைவர் வணிந்து ஹஸரங்க, ஐசிசி பந்துவீச்சாளர்கள் மற்றும் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் தொடர்ச்சியாக 2ஆவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள, மற்றுமொரு இலங்கை வீரரான மஹீஷ் தீக்ஷன 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<