இலங்கை அணியில் விளையாடிவரும் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பதிரணவின் பந்துவீச்சை புகழ்ந்து அனுபவ துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் பாராட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது T20I போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்தப் போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த அஞ்செலோ மெதிவ்ஸ் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இணையும் துஷ்மன்த சமீர
இவ்வாறான நிலையில் அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பதிரணவை அஞ்செலோ மெதிவ்ஸ் பாராட்டியுள்ளார். அதுமாத்திரமின்றி வலைப்பயிற்சியில் மதீஷவின் பந்துவீச்சை எதிர்கொள்வது மிகவும் சவாலான ஒன்று என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
“மதீஷ பதிரணவை வலைப்பயிற்சியில் எதிர்கொள்வது எமக்கான மிகப்பெரிய சவால். எம்முடைய துடுப்பாட்ட வீரர்கள் பலருக்கு அவருடைய பந்து கண்களுக்கு தெரியாது. காரணம் 150 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசுவது இலகுவான விடயமல்ல. சாதாரண பந்துவீச்சு பாணியில் 150 கிலோமீற்றர் வேகம் கொண்ட பந்தை எதிர்த்தாடுவதே கடினம். இவருடைய பாணியில் 150 கிலோமீற்றர் வேகம் என்பது மிகவும் கடினமாகும். ஆனால் கடந்த இரண்டு போட்டிகளிலும் இந்த வேகத்தில் பந்துவீசுகின்றார்.
சர்வதேச லீக் போட்டிகளில் பந்தவீசிய அனுபவத்தை கொண்டுள்ளார். தற்போது அவருக்கு 21 வயது. கடைசி ஓவரில் 12 ஓட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற 10 போட்டிகளில், 8 அல்லது 9 போட்டிகளை வென்றுக்கொடுக்கக் கூடிய திறமை அவரிடம் உள்ளது. அவரை நாம் சரியாக கவனித்துக்கொள்ள வேண்டும். அவருடைய உடற்தகுதியை சரியாக கவனிக்க வேண்டும். ஒழுக்கமான கிரிக்கெட் வீரர். அவரின் எதிர்கால கிரிக்கெட்டை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.
மதீஷ பதிரண ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் T20I போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவியதுடன், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<