ஆப்கான் தொடரிலிருந்து விலகும் துஷ்மந்த சமீர?

254
Dushmantha Chameera

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர விலகியுள்ளார்.  

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கண்டிபல்லேகல மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் (09) நடைபெற்றதுடன், 42 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டி 1க்கு 0 என முன்னிலை பெற்றது. 

இந்த நிலையில், குறித்த போட்டியில் பந்துவீசிக்கொண்டிருந்த துஷ்மந்த சமிர, 8ஆவது ஓவரில் 3 பந்துகளை மாத்திரம் வீசிய போது தொடை தசைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட உபாதையை அடுத்து மைதானத்தை விட்டு வெளியே சென்றார். பின்னர், அவரது ஓவரின் எஞ்சிய 3 பந்துகளையும் சரித் அசலங்க வீசியிருந்தார். குறித்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய துஷ்மந்த 7.3 ஓவர்களில் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்த நிலையில், முதலாவது ஒருநாள் போட்டியின் பிறகு துஷ்மந்தவிற்கு Scan பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அதன் முடிவுகள் இங்கிலாந்தில் உள்ள ஒரு நிபுணருக்கு ஆலோசனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. 

எவ்வாறாயினும், அவருக்கு தற்போது ஏற்பட்டுள்ள உபாதை முந்தைய உபாதையுடன் தொடர்புடையது அல்ல என தெரிவிக்கப்பட்டாலும், மருத்துவர்களில் அறிவுறுத்தலுக்கு அமைய அவருக்கு ஆப்கானிஸ்தான் அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணியுடனான 3ஆவது ஒருநாள் போட்டி மற்றும் அந்த அணியுடனான T20i தொடரில் துஷ்மந்த சமீர விளையாடுவாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

இதனிடையே, காயத்துக்குள்ளாகிய துஷ்மந்த சமீர இன்று (11) நடைபெறுகின்ற 2ஆவது ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டதுடன், அவருக்குப் பதிலாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அசித்த பெர்னாண்டோவை இறுதிப் பதினொருவர் அணியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<