மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷெமார் ஜோசப்பை லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி அண்மையில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகளின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷெமார் ஜோசப் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் 1997-க்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்.
இதன் மூலம் ஷெமார் ஜோசப்பிற்கு சர்வதேச அளவில் பல்வேறு T20 தொடர்களிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் காயம் காரணமாக அவரால் ILT20, பாகிஸ்தான் சுப்பர் லீக் போன்ற தொடர்களில் பங்கேற்கமுடியாமல் போனது.
இந்த நிலையில், உலகின் அனைத்து சர்வதேச வீரர்களும் விளையாட ஆர்வம் காட்டும் இந்தியாவின் ஐபிஎல் தொடரில் விளையாட ஷெமார் ஜோசப்பிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன்படி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் விளையாட 3 கோடி ரூபாய்க்கு ஷெமார் ஜோசப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லக்னோ அணியைச் சேர்ந்த இங்கிலாந்து வீரர் மார்க் வுட்டிற்குப் பதிலாக ஷமார் ஜோஷப்பை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் அவர் ஐபிஎல் தொடரில் அறிமுகமாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
- ILT20 தொடரிலிருந்து விலகும் ஷெமார் ஜோசப்!
- ஆஸியை வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்த மேற்கிந்திய தீவுகள்
மேலும், எதிர்வரும் ஜூன் மாதம் ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடரானது மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கிண்ணத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியிலும் ஷெமார் ஜோசப் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது அவருக்கான வாய்ப்பையும் பிரகாசமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இம்முறை T20 உலகக் கிண்ணத்துகக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தேர்வு செய்வதில ஷெமார் ஜோசப் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அண்மையில் மேற்கிந்தியத் தீவுகளின் பயிற்சியாளர் டேரன் சமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<