புனரமைக்கப்பட்ட ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கட் மைதானத்தை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (05) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
இதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் நிறைவேற்றுக் குழுவின் அழைப்பின் பேரில் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகம், நீர் சிகிச்சை மற்றும் காயத்துக்கான மறுவாழ்வு பிரிவு உள்ளிட்ட வசதிகள், நவீன மின் விளக்குகளுடன் கூடிய மைதானம் ஆகியவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கரங்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கையின் முதலாவது அதிநவீன LED மின் விளக்குகளால் பொருத்தப்பட்ட மைதானம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த நீச்சல் தடாகம், நீர் சிகிச்சை மற்றும் காயங்களுக்கான மறுவாழ்வு பிரிவு போன்ற புதிய வசதிகள் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வசதிகளாகும். இதன் மூலம் வடமத்திய, வடக்கு மற்றும் வடமேற்கு ஆகிய மாகாணங்களில் கிரிக்கெட் வளர்ச்சியை மேம்படுத்தவும், அப்பகுதிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு பயன்பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 13 வயதின் கீழ், 15 வயதின் கீழ், 17 வயதின் கீழ், 19 வயதின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், 23 வயதின் கீழ் பெண்கள் மற்றும் தேசிய சுப்பர் லீக்கில் ஆடும் தம்புள்ளை அணியின் வீரர்கள் வரை மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் உள்ள அனைத்து அணிகளும் இந்த வசதிகளால் பெரிதும் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தம்புள்ளை மைதானத்தில் உள்ளக வலைப் பயிற்சிக்கான நிலையம், புதிய ஊடக மையம் மற்றும் மஹபொல புனரமைப்பு ஆகியவற்றிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அடிக்கல் நாட்டி வைக்கவுள்ளார்.
இந்த நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, காணி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் கலந்து கொள்ளவுள்ளார். அதேபோல, இலங்கை கிரிக்கெட் சபையின் பொருளாளர் சுஜீவ கொடலியத்த, ஏனைய முன்னாள் இணை உறுப்பினர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<