இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் அனுபவர் வீரரும், வேகப்பந்து வீச்சாளருமான ஜேம்ஸ் ஆண்டர்சனும், அறிமுக சுழல்பந்து வீச்சாளர் சொஹைப் பஷீர் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (02) நடைபெறவுள்ளது.
இதனிடையே, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இங்கிலாந்து அணியின் இறுதிப் பதினொருவர் அணி விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய சுழல்பந்து வீச்சாளர் ஜேக் லீச்சிற்கு பதிலாக அறிமுக சுழல்பந்து வீச்சாளர் சொஹைப் பஷீர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வெறும் 6 உள்ளூர் முதல்தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள 20 வயதாகும் சொஹைப் பஷீர் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் இந்தியாவை தோற்கடிப்பதற்காகவே இத்தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், முதல் போட்டியில் தாமதமான விசா காரணத்தால் விளையாடாத அவர் தற்போது 2ஆவது போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். குறிப்பாக முதல் போட்டியில் அறிமுகமாக களமிறங்கி இந்தியாவை திணறடித்த டொம் ஹார்ட்லியைப் போல இவரை இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி களமிறக்குகிறது.
இதுகுறித்து இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இங்கிலாந்து அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ், ‘இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜேக் லீச் விலகுகிறார். அவரது காலில் ஏற்பட்ட இரத்தக் கசிவு இன்னும் முழுமையாக குணமடையாததால் அவரால் இப்போட்டியில் விளையாட முடியாது. அவரது காயம் எங்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்கானித்து வருகின்றனர். மேலும் அவர் இத்தொடரில் பங்கேற்க நாங்கள் போதிய அவகாசம் கொடுத்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
- டொம் ஹார்ட்லியின் சுழலில் வீழ்ந்தது இந்தியா
- இந்திய டெஸ்ட் குழாத்தில் மாற்றம்
- இந்திய டெஸ்ட் அணியில் இணையும் ரஜாட் படிதார்
அத்துடன், முதல் போட்டியில் விக்கெட்டுகளை எடுக்காமல் தடுமாறிய மார்க் வுட்டுக்குப் பதிலாக 42 வயதாகும் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2ஆவது போட்டியில் விளையாடுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதற்கு முன் இந்திய மண்ணில் சிறப்பாக செயல்பட்டுள்ள அவர் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி 2ஆவது போட்டியில் வெற்றியை பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எனவே, நாளை ஆரம்பமாகவுள்ள 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ரெஹான் அஹ்மட், டொம் ஹார்ட்லி, சொஹைப் பஷீர் ஆகிய 3 சுழல்பந்து வீச்சாளர்கள் களமிறங்கவுள்ளதுடன், ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே வேகப்பந்து வீச்சாளராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர்களுடன் முதல் போட்டியில் கலக்கிய ஒல்லி போப், ஜோ ரூட் ஆகியோருடன் பென் டக்கெட், ஸெக் கிரௌலி, ஜொனி பேர்ஸ்டோவ் ஆகியோருக்கும் இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து அணி முதல் போட்டியை வென்றுள்ளதால், அதேபாணியில் இரண்டாவது போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விபரம்: பென் டக்கெட், ஸெக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜொனி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (தலைவர்), பென் ஃபோக்ஸ், ரெஹான் அஹ்மட், டொம் ஹார்ட்லி, சொஹைப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<