மார்ஷ் தலைமையில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலிய T20 அணி

184
Mitchell Marsh named captain

மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளவிருக்கும் அவுஸ்திரேலியாவின் 14 பேர் அடங்கிய T20 குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த T20 குழாத்தினை வழிநடாத்த சகலதுறை வீரரான மிச்சல் மார்ஷ் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

தற்போது அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியானது தமது சுற்றுப்பயணத்தில் தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றது. இந்த டெஸ்ட் தொடரினை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ள நிலையில் குறிப்பிட்ட தொடரின் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி ஆரம்பமாகுகின்றது.

அதன்படி இந்த தொடருக்கே மிச்சல் மார்ஷ் தலைவராக பொறுப்பேற்று அவுஸ்திரேலிய அணியை வழிநடாத்தவிருக்கின்றார். கடந்த ஆண்டு தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திலும் மிச்சல் மார்ஷ் ஆஸி. வீரர்களை T20 தொடரில் வழிநடாத்தியிருந்த காரணத்தினால் இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவினை யார் வழிநடாத்துவது என்பது தொடர்பில் கேள்விகள் எழுகின்றது. உலகக் கிண்ணத்தொடரின் பின்னர் இந்திய அணியுடன் ஆஸி. வீரர்கள் பங்கேற்ற T20 தொடரில் மெதிவ் வேட் தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மறுமுனையில் மேற்கிந்திய தீவுகள் T20 தொடரில் மிச்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. இதேநேரம் இந்த T20 தொடரில் சிரேஷ்ட துடுப்பாட்டவீரரான ஸ்டீவ் ஸ்மித்திற்கும் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

>> IPL தொடர் நடைபெறவுள்ள திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

இதேநேரம் பிக் பேஷ் லீக் போட்டிகளில் இம்முறை அசத்தியிருந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரரான மேட் சோர்ட் மேற்கிந்திய தீவுகள் T20 தொடரில் ஆரம்ப

வீரராக களமிறங்க எதிர்பார்க்கப்படும் நிலையில், கிளன் மெக்ஸ்வெல் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் ஆஸி. அணிக்கு மேலதிக துடுப்பாட்டப் பலமாக அமைகின்றனர்.

அணியின் பந்துவீச்சினைப் பொறுத்தவரை ஜோஷ் ஹேசல்வூட் மற்றும் சோன் அப்போட் ஆகியோர் பிரதான வேகப்பந்துவீச்சாளர்களாகவும், அடம் ஷம்பா பிரதான சுழல் பந்துவீச்சாளராகவும் காணப்படுகின்றனர்.

அவுஸ்திரேலிய T20 குழாம்

மிச்சல் மார்ஷ் (தலைவர்), சோன் அப்போட், ஜேசன் பெஹ்ன்ட்ரோப், டிம் டேவிட், நதன் எல்லிஸ், ஜோஸ் ஹேசல்வூட், ட்ராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லீஸ், கிளன் மெக்ஸ்வேல், மேட் சோர்ட், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மெதிவ் வேட், டேவிட் வோர்னர், அடம் ஷம்பா

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<