சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் அடுத்த மாதம் மோதவுள்ள ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போட்டி அட்டவணையின் திகதிகளில் மாற்றங்கள் ஏற்படாத போதும், ஒருநாள் தொடர் நடைபெறவுள்ள மைதானத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின் போது நடைபெறும் மூன்று ஒருநாள் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இருந்து கண்டி பல்லேகல மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை சில தினங்களுக்கு முன்னர் போட்டி குறித்த தொடருக்கான போட்டி அட்டவணையை அறிவித்திருந்ததுடன், மூன்று ஒருநாள் போட்டிகளும் பெப்ரவரி 09, 11 மற்றும் 14ஆம் திகதிகளில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் 3 ஒருநாள் போட்டிகளையும் கண்டி பல்லேகல மைதானத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று (23) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
- இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!
- ஜனித் பொறுப்பான ஆட்டம்; தோல்வியிலிருந்து இலங்கையை மீட்ட சமீர, வெண்டர்சே
பெப்ரவரி 2ஆம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டியுடன் இந்தத் தொடர் ஆரம்பமாகவுள்ளது, அதனைத் தொடர்ந்து மூன்று பகல் இரவு ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகள் நடைபெறவுள்ளன.
போட்டியின் அனைத்து T20 போட்டிகளும் பெப்ரவரி 17, 19 மற்றும் 21 ஆகிய திகதிகளில் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளது.
இதனிடையே, இலங்கையுடனான இருதரப்பு தொடரில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் அணி எதிர்வரும் 30ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<