தெற்காசிய நகர்வல ஓட்டம் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு நடைபெற்ற தெரிவுப் போட்டியில் இலங்கை இராணுவம் சார்பில் பங்குகொண்ட மலையக வீரர் விக்னராஜ் வக்ஷான் முதலிடம் பிடித்துள்ளார்.
இதன்மூலம் பாகிஸ்தாhனின் இஸ்லாமாபாத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள 3ஆவது தெற்காசிய நகர்வல ஓட்டம் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை அவர் பெற்றுக்கொண்டார்.
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள தெற்காசிய நகர்வல ஓட்டம் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுனர் சங்கமும், லங்கா லயன்ஸ் மெய்வல்லுனர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த தெரிவுப் போட்டி நேற்றுமுன்தினம் (20 ஹோமாகம, தியகமவில் நடைபெற்றுது.
10 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட விக்னராஜ் வக்ஷான் முதலிடம் பிடித்தார். போட்டியை நிறைவு செய்ய 32.11 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.
அண்மைக்காலமாக தேசிய ரீதியிலான நகர்வல ஓட்டம், அரை மரதன், 10 ஆயிரம் மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஆகிய ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளை ஈட்டி வருகின்ற தலவாக்கலையைச் சேர்ந்த வக்ஷான், இறுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 1500 மீட்டர் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தார்.
- 5 ஆயிரம் மீட்டரில் தேசிய சம்பியனாக மகுடம் சூடினார் வக்ஷான்
- தேசிய நகர்வல ஓட்டத்தில் மலையக வீரர் சிவராஜனுக்கு வெண்கலப் பதக்கம்
- தெற்காசிய நகர்வல ஓட்டத் தொடரில் வெண்கலம் வென்ற நிலானி மற்றும் லயனல்
அதுமாத்திரமின்றி, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா நகர்வல ஓட்டத்தில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பொலிஸ் கழக வீரர் ஹேமன்த குமார போட்டியை 32.20 செக்கன்களில் கடந்து 2ஆவது இடத்தையும், இராணுவ கழக வீரர் டபிள்யூ அபேரத்ன 32.27 செக்கன்களில் போட்டியைக் கடந்து 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.
இதனிடையே, தெற்காசிய நகர்வல ஓட்டம் சம்பியன்ஷிப் தொடருக்காக நடைபெற்ற தெரிவுப் போட்டியில் பங்குகொண்ட மலையகத்தின் மற்றுமொரு நட்சத்திர வீரரான குமார் சண்முகேஸ்வரனுக்கு 7ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இதேவேளை, கனிஷ்ட வீரர்களுக்காக 8 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டதாக நடைபெற்ற தெரிவுப் போட்டியில் இரத்தினபுரி அலோசியஸ் கல்லூரியைச் சேர்ந்த லஹிரு அச்சிந்த முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதில் கம்புராவல கல்லூரியின் கே. மதுஷன் இரண்டாம் இடத்தையும் திகன ரஜவெல்ல இந்துக் கல்லூரியின் ஆர். விதுஷான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க