இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) பிரதான அனுசரணையாளருக்கான உரிமையை டாடா குழுமம் 2028ஆம் ஆண்டு வரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தை 2028 வரை நீட்டிப்பதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஐபிஎல் தொடரின் பிரதான அனுசரணையாளராக டாடா செயல்படவுள்ளது. இந்தப் புதிய ஒப்பந்தம் ஒரு சீசனுக்கு இந்திய பணப்பெறுமதியில் 500 கோடி ரூபாயை வழங்குவதற்கான உறுதிமொழியை உள்ளடக்கியது.
இதன்படி, டாடா குழுமம் அடுத்த 5 சீசன்களுக்கும் 2500 கோடி ரூபாய் தொகையை பிசிசிஐ-க்கு செலுத்தும்.
சீன கையடக்கத் தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான விவோ, ஐபிஎல் தொடரின் பிரதான அனுசரணையாளராக கடந்த 2018 முதல் 2022 வரை இருப்பதற்கு பிசிசிஐ-யுடன் 2,200 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
கடந்த 2020இல் லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா இராணுவங்கள் இடையே ஏற்பட்ட மோதல் எதிரொலியாக சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் எதிர்ப்பு எழுந்தது.
இதனால் சீன நிறுவனமான விவோ, ஐபிஎல் தொடரின் பிரதான அனுசரணையாளராக செயல்படுவதில் இருந்து ஓராண்டுக்கு விலகி, அதை ‘Dream 11’ நிறுவனத்துக்கு விட்டுக்கொடுத்தது. பின்னர் 2021இல் மீண்டும் ஐபிஎல் தொடரின் பிரதான அனுசரணையாளராக மாறியது.
இதனிடையே, எஞ்சியிருக்கும் ஓராண்டுக்கு பிரதான அனுசரணையாளராக செயல்படும் உரிமத்தை தகுந்த நிறுவனத்திடம் மாற்றி விடுவதற்கு விவோ முனைவதாகவும், அதற்கு பிசிசிஐ-யும் ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்பட்டது.
- இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்க்கும் ஜொன்டி ரோட்ஸ், பரத்
- தேசிய கிரிக்கெட் அகடமியில் பதவியை துறந்த மிக்கி ஆர்தர்
- பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் பதவியில் இருந்து விலகிய அஷ்ரப்
இந்த நிலையில், இந்தியா – சீனா இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, விவோ உடனான ஒப்பந்தத்தை ஐபிஎல் நிர்வாகம் முறித்துக் கொண்டது. இதனால் கடந்த 2022 மற்றும் 2023 சீசன்களின் ஐபிஎல் தொடரின் பிரதான அனுசரணையாளராக டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆண்டுக்கு 365 கோடி ரூபா பணத்தை வழங்க டாடா நிறுவனம் முன்வந்தது. இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடரின் பிரதான அனுசரணையாளர் உரிமத்தை வழங்குவதற்காக விலைமனு கோரல் கடந்த டிசம்சர் கடைசி வாரத்தில் கோரப்பட்டது.
இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் 5 இலட்சம் ரூபா முன்தொகையுடன் விண்ணப்பிக்க ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்தது. இதில் திடீரென ஆதித்யா பிர்லா நிறுவனம் உள்ளே வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அந்த நிறுவனம் தரப்பில் பிரதான அனுசரணையாளர் உரிமத்தைப் பெற 2500 கோடி ரூபா வழங்கத் தயாராக இருப்பதாக கூறியிருந்தது. இதனால் ஐபிஎல் நிர்வாகக் குழு தரப்பில் டாடா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், Right to Match அடிப்படையில் டாடா நிறுவனமும் 5 ஆண்டுகளுக்கு 2500 கோடி ரூபா பணத்தை வழங்க ஒப்புக் கொண்டதால், இறுதியாக ஐபிஎல் தொடரின் பிரதான அனுசரணையாளர் உரிமத்தை மீண்டும் டாடா நிறுவனமே கைப்பற்றியது.
இதன் மூலமாக ஆண்டுக்கு 500 கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனத்துடன் ஐபிஎல் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே ஒளிபரப்பு உரிமை பிரிந்ததன் காரணமாக பிசிசிஐ-க்கு 50 ஆயிரம் கோடிக்கும் அதிக வருமானம் கிடைத்தது. தற்போது பிரதான அனுசரணையாளர் ஒப்பந்தமும் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளதால், ஐபிஎல் தொடரின் மதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<