2023 ஆண்டின் ஐசிசி இன் வளர்ந்து வரும் இளம் வீரர் மற்றும் ஐசிசி இன் சிறந்த T20 கிரிக்கெட் வீராங்கனை ஆகிய விருதுகளுக்கு இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க மற்றும் இலங்கை மகளிர் அணித்தலைவி சமரி அத்தபத்து ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, T20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
அதன்படி, 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த T20 வீரர், வீராங்கனை மற்றும் வளர்ந்து வரும் இளம் வீரர், வீராங்கனைக்கான 4 பேர் அடங்கிய பரிந்துரைப் பட்டியலை ஐசிசி நேற்று (03) வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், 2023ஆம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் இளம் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
அந்தப் பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க, இந்தியாவின் யஷாஸ்வி ஜெய்ஸ்வால், நியூலாசிந்தின் ரச்சின் ரவீந்திரா மற்றும் தென்னாப்பிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தில் சிறப்பாக செயல்பட்ட டில்ஷான் மதுசஷங்க, ஐசிசி இன் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
துஷ்மந்த சமீரவின் உபாதை காரணமாக உலகக் கிண்ணத்தில் ஆடும் வாய்ப்பைப் பெற்ற அவர், ஜிம்பாப்வேயில் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் 21 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.
கடந்த ஆண்டு இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட 23 வயதான மதுஷங்க, இதுவரை 15 போட்டிகளில் ஆடி 6.09 சராசரியுடன் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், இதுவரை 11 T20i போட்டிகளில் ஆடி 12 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.
- 2023 இலங்கையின் விளையாட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்திய பெண்கள்
- 2023ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் – ஒரு மீள்பார்வை
அதேபோல் 2023ஆம் ஆண்டின் சிறந்த T20 கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கும் 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. அதில் இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து, இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டோன், மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த ஹேலி மெத்யூஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீராங்கனை எல்லிஸ் பெர்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பல வரலாற்று வெற்றிகளைப் பதிவு செய்தது. இதில் சமரி அத்தபத்துவின் பங்களிப்பிற்கும் முக்கிய இடம் உண்டு. கடந்த ஆண்டு 16 T20i போட்டிகளில் விளையாடிய அவர், 31.33 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 470 ஓட்டங்கள் எடுத்தார். மேலும், கடந்த ஆண்டு பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இந்த நிலையில், பங்களாதேஷின் மருபா அக்தர், இங்கிலாந்தின் லோரன் பெல், ஸ்கொட்லாந்தின் டார்சி கார்ட்டர் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஃபோப் லிச்ஃபீல்ட் ஆகிய நால்வரும் ஐசிசி இன் வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, 2023ஆம் ஆண்டின் சிறந்த T20 கிரிக்கெட் வீரர் விருதுக்காக இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் , ஜிம்பாப்வே அணியின் சகலதுறை வீரர் சிக்கந்தர் ராசா, நியூசிலாந்தைச் சேர்ந்த மார்க் சாப்மேன் மற்றும் உகாண்டா அணியைச் சேர்ந்த அல்பேஷ் ராம்ஜானி ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<