உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் புதிய தெரிவுக்குழு இந்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஜிம்பாப்வே தொடருக்காக இரண்டு புதிய தலைவர்களை உத்தியோகப்பூர்வமாக நியமித்ததன் மூலம் முன்னாள் தலைவர் தசுன் ஷானகவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் போது காயத்துக்கு உள்ளாகிய தசுன் ஷானகவிற்கு உலகக் கிண்ணத்திலிருந்து விலக நேரிட்டது. இதனையடுத்து குறித்த தொடரில் பதில் தலைவராக செயல்பட்ட குசல் மெண்டிஸுக்கு இந்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஜிம்பாப்வே அணியுடனான தொடரில் ஒருநாள் அணியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை T20 அணியின் புதிய தலைவராக வனிந்து ஹசரங்கவை நியமிக்கவும் தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனிடையே, தசுன் ஷானகவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை அணி ஒருசில தொடர்களில் பின்னடைவை சந்தித்து, ஒரு சகலதுறை வீரராக பிராகசிக்கத் தவறினாலும், ஒரு தலைவராக இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணியை சிறந்த முறையில் வழிநடத்தி பல வரலாற்று வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார் என்றால் மிகையாகாது.
தசுன் ஷானக 2019 இல் இலங்கை அணிக்கு முதன்முறையாக தலைமை தாங்கினார், தான் தலைவராகப் பணியாற்றிய முதல் T20 தொடரிலேயே பிரபல பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே 3க்கு 0 என வீழ்த்தினார்.
எவ்வாறாயினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் நிரந்தர தலைவராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் 41 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்திய அவர், 23 போட்டிகளில் வெற்றிகளை ஈட்டிக் கொடுத்தார். இது 57.50% சராசரியாக இருந்தது.
- புதிய தலைவர்களைப் பெற்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி
- 2023ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் – ஒரு மீள்பார்வை
இதில் சிறப்பம்சம் என்னவெனில் 2022இல் பலம் வாய்ந்த அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றதுடன், 30 ஆண்டுகளுக்குப் பிறகு இருதரப்பு தொடரொன்றில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை தோற்கடித்து புது வரலாறு படைத்தது.
மேலும், இலங்கையில் வைத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதுடன், ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் தோல்வியுாத அணியாக இலங்கை அணி சம்பியனாக மகுடம் சூடியது. இந்த அனைத்து வெற்றிகளிலும் இலங்கை அணியை வழிநடத்தியவர் தசுன் ஷானக தான்.
இதேவேளை, 48 T20Is போட்டிகளில் இலங்கையை வழிநடத்திய தசுன், அதில் 22 போட்டிகளில் வெற்றி பெற்றதோடு வெற்றி வீதம் 47.91% ஆக பதிவாகியுள்ளது.
இதுஇவ்வாறிருக்க, 2022இல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆசியக் கிண்ண வெற்றியை அவரது T20 தலைமைத்துவத்தி்ன் கீழ் பெற்றுக் கொண்ட மிகப்பெரிய சாதனையாக குறிப்பிடலாம். இந்த வரலாற்று வெற்றி இலங்கையின் 8 ஆண்டுகால ஆசியக் கிண்ண வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது.
இது தவிர, இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான T20 தொடரில் பெற்ற வெற்றியை, தசுனின் தலைமையில் பெற்றுக்கொண்ட தனிச்சிறப்புமிக்க வெற்றியாகவும் குறிப்பிட முடியும்.
தசுனின் தலைமைத்துவ திறன்கள் உயர் மட்டத்தில் இருந்த போதிலும், அவர் தனது கடைசி சில போட்டிகளில் ஒரு துடுப்பாட்ட வீரராக சோபிக்கவில்லை. குறிப்பாக, அவரது கடைசி 19 ஒருநாள் இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைச் சதத்தை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது.
எவ்வாறாயினும், ஜிம்பாப்வே தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள உத்தேச குழாத்தில் தசுன் ஷானகவும் இடம்பெற்றுள்ளார். எனவே, இலங்கை அணியின் தலைவர் பதவியை அவர் இழந்திருந்தாலும், உபுல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு இன்னும் தசுனின் சகலதுறை திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளது என்பது தெளிவாகிறது.
தசுன் ஷானகவின் தலைமைத்துவ சாதனைகள்
ஒரு நாள் போட்டிகள் வெற்றி தோல்வி முடிவற்றவை வெற்றி வீதம் 41 23 17 1 57.50 T20Is போட்டிகள் வெற்றி தோல்வி முடிவற்றவை வெற்றி வீதம் 48 22 24 2 47.91
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<