அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தாண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் விளையாடவுள்ளது.
முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடருக்கான கிரேக் பிராத்வைட் தலைமையிலான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து அனுபவ வீரர்களான ஜேசன் ஹோல்டர் மற்றும் கைய்ல் மேயர்ஸ் ஆகிய இருவரும் விலகியுள்ளனர். அத்துடன், வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் உதவி தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.
மறுபுறத்தில் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளதால் அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் 7 புதுமுக வீரர்களை இணைத்துக் கொள்ள அந்நாட்டு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
இதன்படி, ஸச்சரி மெக்காஸ்கி, விக்கெட் காப்பாளர் டெவின் இம்லாச், சகலதுறை வீரர்களான ஜஸ்டின் கிரீவ்ஸ், கவேம் ஹாட்ஜ் மற்றும் கெவின் சின்க்ளேர், வேகப்பந்து வீச்சாளர்களான அகீம் ஜோர்டான் மற்றும் ஷமர் ஜோசப் என புதிய ஏழு வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
- அறிமுக போட்டியுடன் டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறும் பாகிஸ்தான் வீரர்
- இந்திய டெஸ்ட் அணியிலிருந்து விலகிய இளம் வீரர்
இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் டெஸ்ட்மண்ட் ஹெய்ன்ஸ் கூறுகையில்,
சில முன்னணி வீரர்கள் கிடைக்காததால் தற்பொழுது சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம். மேலும், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி முழுக்க நிறைய திறமைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள வீரர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு டெஸ்ட் அரங்கில் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அவுஸ்திரேலியா எப்பொழுதும் சவாலாகத்தான் இருக்கும். ஆனால் நாங்கள் எங்கள் அணி மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணி ஜனவரி 10-13ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா பதினொருவர் அணியுடன் பயிற்சிப் போட்டியில் மோதுகிறது. அதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 17ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமாகவுள்ளதுடன், 2ஆவது போட்டி பிரிஸ்பனில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது.
ஆஸி. டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி விபரம்
கிரெய்க் பிராத்வைட் (தலைவர்), அல்ஸாரி ஜோசப் (உதவி தலைவர்), தேஜ்நரைன் சந்தர்பால், கிர்க் மெக்கென்சி, அலிக் அதானாஸ், கவெம் ஹாட்ஜ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜோசுவா டா சில்வா, அகீம் ஜோர்டான், குடகேஷ் மோட்டி, கிமார் ரோச், கெவின் சின்க்ளேர், டெவின் இம்லாக், ஷமார் ஜோசப், சக்காரி மெக்காஸ்கி.
>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<