சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிதாக வெளியிட்டுள்ள ஐசிசி T20i பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னோய் முதலிடத்தை பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு சர்வதேச T20i போட்டிகளில் அறிமுகமகியிருந்த ரவி பிஸ்னோய் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறந்த பந்துவீச்சு பிரகாசிப்பை வெளிப்படுத்தி 4 இடங்கள் முன்னேற்றத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
>> அறிமுக வீரர்களுடன் பங்களாதேஷிற்கு எதிரான நியூசிலாந்து ஒருநாள் குழாம்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20i தொடரை இந்திய அணி 4-1 என வெற்றிக்கொண்டதுடன், இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசி தொடர் ஆட்டநாயகன் விருதை ரவி பிஸ்னோய் வென்றிருந்தார்.
அதேநேரம் கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20i தொடரில் அறிமுகமாகியிருந்த இவர் 21 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ரவி பிஸ்னோய் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் ரஷீட் கான் இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
அதுமாத்திரமின்றி இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க மற்றும் இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஆதில் ரஷீட் ஆகியோர் மூன்றாவது இடத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளதுடன், இலங்கை அணியின் மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன 5வது இடத்தை பிடித்துக்கொண்டுள்ளார்.
>> IPL எதிர்காலம் தொடர்பில் கூறும் கிளேன் மெக்ஸ்வெல்!
இலங்கை அணியை பொருத்தவரை T20i பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்கு வனிந்து ஹஸரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இரண்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
சர்வதேச T20i தரவரிசை பட்டியலில் துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் மற்றும் சகலதுறை வீரர்கள் வரிசையில் பங்களாதேஷின் சகீப் அல் ஹஸன் ஆகியோர் முதலிடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<