ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து நீங்கும் ஹசரங்க

IPL 2024 Auction

2559
IPL 2024 Auction

2024ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரில் பங்கெடுக்கும் அணிகள் புதிய IPL வீரர் ஏலத்திற்கு முன்னர் தக்கவைத்துக் கொண்ட மற்றும் விடுவித்த இலங்கை வீரர்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

>>ஓட்டங்களின்றி 8 விக்கெட்டுக்கள் சாய்த்த கொழும்பு இந்துக் கல்லூரி வீரர்

2024ஆம் ஆண்டுக்கான IPL தொடரிற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. இந்த வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக அணிகள் தாங்கள் தக்க வைத்திருக்கும் வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டிருக்கின்றன.

இதில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை நோக்கும் போது முக்கிய வெளியேற்றமாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தங்களது முன்னணி சுழல் வீரர்களில் ஒருவராக காணப்பட்ட வனிந்து ஹஸரங்கவினை வெளியேற்றியிருப்பதனை குறிப்பிட முடியும்.

வனிந்து ஹசரங்க இறுதியாக நடைபெற்ற IPL பருவத்தில் உபாதைச் சிக்கல்கள் காரணமாக ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக எதிர்பார்த்த அளவு பிரகாசிக்காத போதிலும் 2022ஆம் ஆண்டுக்கான IPL பருவத்தில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தினைப் பெற்றிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

மறுமுனையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் அதிரடி ஆரம்ப வீரர் பானுக்க ராஜபக்ஷவும் ஏலத்திற்கு முன்னதாக வெளியேற்றப்பட்டிருக்கின்றார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இதுவரை 13 IPL போட்டிகளில் ஆடியிருக்கும் பானுக்க ராஜபக்ஷ ஒரு அரைச்சதம் அடங்கலாக 277 ஓட்டங்களை குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து நீங்கும் ஹார்திக் பாண்டியா

குஜராத் டைடன்ஸ் அணிக்காக 2023ஆம் ஆண்டுக்கான IPL பருவத்தில் உபாதை பிரதியீட்டு வீரராக உள்வாங்கப்பட்ட இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணித்தலைவர் தசுன் ஷானக்கவும் அவ்வணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார்.

இதேநேரம் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான மதீஷ பதிரன மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோர் தொடர்ந்தும் தக்க வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<