குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து நீங்கும் ஹார்திக் பாண்டியா

1182

குஜராத் டைடன்ஸ் அணியின் தலைவரான ஹார்திக் பாண்டியாவினை மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த இந்தியன் பிரிமீயர் லீக் (IPL) பருவத்திற்காக வீரர் பரிமாற்றம் (Trade) மூலம் இணைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> ஓட்டங்களின்றி 8 விக்கெட்டுக்கள் சாய்த்த கொழும்பு இந்துக் கல்லூரி வீரர்

இந்தியாவின் ESPNcricinfo செய்திச் சேவை வெளியிட்டிருக்கும் தகவல்களுக்கு அமைய இந்திய நாணயப்படி சுமார் 15 கோடி ரூபாய்களுக்கு (இலங்கை நாணயப்படி சுமார் 59 கோடி ரூபாய்கள்) ஹார்திக் பாண்டியாவின் வீரர் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வீரர் பரிமாற்றம் வெற்றிகரமாக இடம்பெறும் போது ஹார்திக் பாண்டியா தனது வீரர் பரிமாற்றக்கட்டணத்தில் 50% இணை ஊதியமாக பெறுவார் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் இந்த வீரர் பரிமாற்றம் உறுதியாகும் சந்தர்ப்பத்தில் அது IPL போட்டிகள் வரலாற்றில் அதிக தொகைக்கு நடைபெற்ற வீரர் பரிமாற்றமாகவும் மாறவிருக்கின்றது.

2015ஆம் ஆண்டில் இருந்து IPL போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய ஹார்திக் பாண்டியா பின்னர் அவ்வணியினால் விடுவிக்கப்பட்டு, குஜராத் டைடன்ஸ் அணி அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து 2022ஆம் ஆண்டு குஜராத் டைடன்ஸ் அணி IPL சம்பியன் பட்டம் வென்ற போது அதன் தலைவராகவும் செயற்பட்டிருந்த ஹார்திக் பாண்டியா, இரண்டு பருவங்களில் அவ்வணிக்காக விளையாடி 30 இன்னிங்ஸ்களில் 833 ஓட்டங்கள் குவித்திருப்பதோடு, 11 விக்கெட்டுக்களையும் மொத்தமாக கைப்பற்றியிருக்கின்றார்.

>> மன்னார் மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கும் கிரிக்கெட் வீராங்கனை

ஹார்திக் பாண்டியவின் வீரர் பரிமாற்றம் நடைபெறும் விடயம் இன்னும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணி நிர்வாகங்கள் மூலம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத போதும் காலக்கிரமத்தில் அது தொடர்பில் அறிவிக்கப்படும் என நம்பப்படுகின்றது.

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<