முன்னணி வீரர்களை இழக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

567

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் குழாம் முன்னணி வீரர்கள் இருவரினை இழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றது.

>> உலகக் கிண்ண குழாத்தில் இருந்து வெளியேறும் லஹிரு குமார

அந்தவகையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட சகலதுறைவீரரான கிளன் மெக்ஸ்வெல் பொழுது போக்கிற்காக கோல்ப் விளையாட்டில் பங்கேற்க சென்ற போது, தலை உபாதை (Concussion) ஒன்றுக்கு முகம் கொடுத்ததன் காரணமாக ஆஸி. அணி எதிர்வரும் சனிக்கிழமை (04) இங்கிலாந்துடன் ஆடவிருக்கும் போட்டியில் விளையாட முடியாத நிலை உருவாகியிருக்கின்றது.

அதேநேரம் அவுஸ்திரேலிய அணியின் மற்றுமொரு துடுப்பாட்ட சகலதுறைவீரரான மிச்சல் மார்ஷ் சொந்த காரணங்களுக்காக தனது தாயகமான அவுஸ்திரேலியாவிற்கு இன்று (02) திரும்புவதனால் அவர் உலகக் கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் இருந்து வெளியேறியிருக்கின்றார்.

இதேவேளை தாயகத்திற்கு திரும்பும் மார்ஷ் உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணியில் மீண்டும் இணைவது உறுதிப்படுத்தப்படாத நிலையில் அவர் உலகக் கிண்ணத் தொடரில் இருந்து முழுமையாக வெளியேறி இருப்பதாகவும் சில செய்தி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இதேநேரம் மெக்ஸ்வெல் மற்றும் மார்ஷ் இல்லாத நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அலெக்ஸ் கெரி, ஷோன் அப்போட் அல்லது மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய மூன்று வீரர்களில் இருவருக்கு இங்கிலாந்து மோதலில் வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் குசல் மெண்டிஸ்!

மிச்சல் மார்ஷ் உலகக் கிண்ணத் தொடருக்கான ஆஸி. அணியில் இருந்து முழுமையாக வெளியேறும் சந்தர்ப்பத்தில் அவரின் பிரதியீட்டு வீரராக, சுழல்பந்துவீச்சாளர் தன்வீர் சங்கா ஆஸி. குழாத்தில் இணையலாம் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தன்வீர் சங்கா ஏற்கனவே அவுஸ்திரேலிய அணியின் உலகக் கிண்ண குழாத்தில் மேலதிக வீரராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<