“தலைவர் பதவி என்னுடைய துடுப்பாட்டத்தை பாதிக்காது” – மெண்டிஸ்

Cricket World Cup 2023

1061

இலங்கை அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் 26வது ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். 

அணியின் தலைவர் தசுன் ஷானக தொடைப்பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக உலகக்கிண்ணத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், குசல் மெண்டிஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். 

இலங்கை கிரிக்கெட் அணிக்கான திட்டங்கள் குறித்து மஹேல ஜயவர்தன

இலங்கை 19 வயதின் கீழ் அணியின் தலைவராக 2014ம் ஆண்டு செயற்பட்டதுடன், முதன்முறையாக இலங்கை அணியின் தலைவராக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் குசல் மெண்டிஸ் இவர் களமிறங்கியுள்ளார். 

தலைவர் பதவி தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இவர், தலைவர் பதவி கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். தலைவர் பதவி எனக்கு புதிதல்ல என்பதால் முன்பு போன்று தொடர்ந்து ஆடுவேன். நான் இதற்கு முன் ஏனைய அணிகளுக்கு தலைவராக இருந்தேன். குவாஹ்டியில் நடந்த பயிற்சி போட்டியில் கூட, அணியை வழிநடத்தினேன். நான் அணித்தலைவராக இருந்தாலும் என்னுடைய ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டேன். அணிக்கு தேவையான முறையில் ஆடுவேன் 

குசல் மெண்டிஸ் உலகக்கிண்ணத்தில் 2 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஒரு அரைச்சதம் அடங்கலாக 194 ஓட்டங்களை குவித்துள்ளார். உலகக்கிண்ணத்தில் வெளிப்படுத்தும் தன்னுடைய துடுப்பாட்டம் தொடர்பில் குறிப்பிட்ட குசல் மெண்டிஸ், 

என்னுடைய துடுப்பாட்ட பாணியை மாற்ற எனக்கு விருப்பமில்லை. உலகக்கிண்ணத்துக்கு வருவதற்கு முன் நான் இவ்வாறு வேகமான ஓட்ட வேகத்துடன் ஓட்டங்களை குவிப்பேன் என நினைக்கவில்லை. எனினும் பயிற்சிப் போட்டிகளின் பின்னர் ஆடுகளங்கள் துடுப்பாட்டத்துக்கு சிறப்பாக இருந்தமையால், எப்போதும் போன்று ஓட்டங்களை பெற்றுக்கொள்ள நினைத்தேன். எதிரணிகள் என்னை கட்டுப்படுத்துவதற்கு திட்டங்கள் அமைக்கும் போது சற்று கவனமாக ஆடுவேன். நான் துடுப்பாட்ட பாணியை மாற்றுவதற்கு தயாராக இல்லை. காரணம் நான் இவ்வாறு ஓட்டங்களை குவித்தால் எம்மால் வெற்றிக்கொள்ள முடியும் என்றார். 

இலங்கை அணி உலகக்கிண்ணத்தின் முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைவதற்கு முக்கியமான காரணம் பந்துவீச்சு. துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் பந்துவீச இலங்கை வீரர்கள் தடுமாறுகின்றனர். இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட இவர், 

இந்தியா ஆடுகளங்களில் அனைத்து அணிகளின் பந்துவீச்சாளர்களும் தடுமாறுவதை பார்த்திருக்கிறோம். பந்துவீச்சாளர்கள் ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்தி திறமையை வெளிப்படுத்துவர் என நம்புகிறேன். எமக்கு எதிராக மட்டுமல்ல, சிறந்த பந்தவீச்சு குழாத்துக்கு எதிராகவும் 300-350 ஓட்டங்களை இந்த ஆடுகளங்களில் பெற்றுக்கொள்கின்றனர். உடனடியாக பல மாற்றங்களை பந்துவீச்சாளர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அணித்தலைவர் என்ற ரீதியில் பயிற்சியில் அவர்கள் எதனை செய்கிறார்கள் என அறிந்துக்கொண்டு, அவர்களுடைய முழு திறமையையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறேன் என சுட்டிக்காட்டினார். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<