2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் அணிகளுக்கான பரிசுத்தொகை விபரம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>ஆசிய விளையாட்டு விழாவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி
ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவிருக்கின்றது. அதன்படி இந்த உலகக் கிண்ணத் தொடரின் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத்தொகையாக 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி சுமார் 129 மில்லியன் ரூபா) அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதேநேரம் தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெறும் அணி 2 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் (இலங்கை நாணயப்படி சுமார் 646 மில்லியன் ரூபா) பெறும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதேவேளை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அதில் தோல்வியடையும் அணிகள் பரிசுத்தொகையாக தலா 800,000 அமெரிக்க டொலர்களையும் (இலங்கை நாணயப்படி சுமார் 258 மில்லியன் ரூபா), தொடரின் குழுநிலைப் போட்டிகளோடு உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறும் அணிக்கு 100,000 அமெரிக்க டொலர்களும் (இலங்கை நாணயப்படி சுமார் 32 மில்லியன் ரூபா) பரிசாக வழங்கப்படவிருக்கின்றது.
இவை ஒரு பக்கமிருக்க குழுநிலைப் போட்டிகளில் அணிகள் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் 40,000 அமெரிக்க டொலர்களும் (இலங்கை நாணயப்படி சுமார் 12 மில்லியன் ரூபா) பரிசாக வழங்கப்படவிருக்கின்றது.
அதன்படி உலகக் கிண்ணத் தொடரின் போது மொத்தமாக சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையாக அணிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருக்கின்றது.
ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் மொத்தமாக 48 போட்டிகள் இடம்பெறவிருப்பதோடு, தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் திகதி இந்தியாவின் அஹமதபாதில் நடைபெறுகின்றது.
>>19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது
இதேநேரம் ஆடவர் உலகக் கிண்ணத் தொடரினைப் போன்று 2025ஆம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் அணிகளுக்கும் சம அளவில் பரிசுத்தொகை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
நிலை | பரிசு | மொத்தம் |
வெற்றியாளர் (1) | 4,000,000 | 4,000,000 |
இராண்டாம் இடம் (1) | 2,000,000 | 2,000,000 |
அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியுறும் அணிகள் (2) | 800,000 | 1,600,000 |
குழுநிலை சுற்றினை தாண்டாத அணிகள் (6) | 100,000 | 600,000 |
ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் (45) | 40,000 | 1,800,000 |
மொத்தம் | 10,000,000 |
*பரிசுத்தொகை அமெரிக்க டொலர்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<