ஆசியக் கிண்ணத்துடன் கைகோர்க்கும் பி-லவ் கண்டி அணி

Asia Cup 2023

454

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரின் பிரதான அனுசரணையாளராக ‘Super 11 Fantasy League’ கையெழுத்திட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

ஆசியாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ணத் தொடர் ஆகஸ்ட் 30ஆம் திகதி பாகிஸ்தானின் முல்தானில் ஆரம்பமாகவுள்ளதுடன், முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த நிலையில், இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடரில் புதிய பெயருடன் களமிறங்கி சம்பியன் பட்டம் வென்ற பி-லவ் கண்டி அணியின் உரிமையாளரான உமர் கான் 2023 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு பிரதான அனுசரணை வழங்க முன் வந்துள்ளார்.

இதன்படி, 2023 ஆசியக் கிண்ணத்தின் பிரதான அனுசரணையாளராக உமர் கானின் Super 11 செயல்படவுள்ளது. இந்த அறிவிப்பினை Super 11 Fantasy League இன் விளம்பரத் தூதுவரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திரமுமான வசீம் அக்ரம் மற்றும் அதன் உரிமையாளர் உமர் கான் ஆகியோர் டுபாயில் வைத்து வெளியிட்டனர்.

‘இந்த தொடர் தீவிர கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான போட்டித் தொடராக இருக்கும் என நம்புகிறேன். அதேபோல, மறக்க முடியாத போட்டித் தொடரொன்றை காண தயாராகுங்கள்” என வசீம் அக்ரம் தெரிவித்தார்.

பி-லவ் வலையமைப்பின் உரிமையாளரான உமர் கான், டுபாயை தளமாகக் கொண்ட டிஜிட்டல் நாணய வியாபார உரிமையாளராவார். அதேபோல, பி-லவ் வலையமைப்பானது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி செயழியாகும். இதன்மூலம் பயனர்கள் BLV

டோக்கன்களைப் பெறவும், பரிந்துரைகளை அழைக்கவும், குழுக்களை உருவாக்கவும் தினசரி வெகுமதிகளைப் பெறவும் அனுமதிக்கிறது.

”Super 11 ஆசியக் கிண்ணத் தொடரின் பிரதான அனுசரணையாளராக கையெழுத்திட்டுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. Super 11 Fantasy League, ஆசியக் கிண்ணத்தின் தொடருடன் இணைந்து ஆரம்பிக்கப்படும் ஒரு Fantasy தளமாகும். இது ரசிகர்களுக்கு விளையாட்டில் ஈடுபட வாய்ப்பளிக்கிறது. அதேபோல, ஆசியக் கிண்ணத்தில் அவர்களுக்கு பங்கேற்பதற்கும் வாய்ப்பளிக்கும்” என சுபர் 11 இன் தலைமை நிர்வாக அதிகாரி உமர் கான் கூறினார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<