பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தலைவராக முன்னணி சகலதுறை வீரர் சகீப் அல் ஹஸன் நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சகீப் அல் ஹஸன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்துவரும் ஆசியக்கிண்ணம் மற்றும் உலகக்கிண்ணங்களில் பங்களாதேஷ் அணியின் தலைவராக தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.
>>குழந்தைகளின் உயிர்காப்பிற்காக 4.5 மில்லியன் திரட்டியுள்ள LPL தொடர்
பங்களாதேஷ் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக தமிம் இக்பால் செயற்பட்டுவந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இவர் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார் என்பதுடன், பங்களாதேஷ் பிரதமரின் கோரிக்கையின் படி மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட தீர்மானித்தார்.
தமிம் இக்பாலின் விலகலை தொடர்ந்து அவருக்கு பதிலாக புதிய தலைவரை நியமிக்கும் பணியில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஈடுபட்டிருந்தது. இதில் சகீப் அல் ஹஸன் அல்லது லிடன் டாஸ் ஆகியோரில் ஒருவர் தலைவராக செயற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான நிலையில் புதிய தலைவராக சகீப் அல் ஹஸன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணம் மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள உகலகக்கிண்ண தொடர்களில் தலைவராக செயற்படுவார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜ்முல் ஹாஸன் அறிவித்துள்ளார்.
சகீப் அல் ஹஸன் தற்போது இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் கோல் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<