இந்திய அணிக்கு தலைவராக திரும்பும் பும்ரா

253

காயத்தால் இந்திய அணியில் விளையாடாமல் இருந்த ஜஸ்ப்ரித் பும்ரா, அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரில் இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிக்கெட் தொடருக்குப் பிறகு அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடன் மூன்று T20i போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

ஆகஸ்ட் 18, 20 மற்றும் 23 ஆகிய திகதிகளில் இரு அணிகள் இடையேயான T20i தொடர் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அயர்லாந்து அணியுடனா  T20i தொடரில் இருந்து இந்திய அணியி;ன் சிரேஷ்ட வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், IPL தொடரில் பிரகாசித்திருந்த பல இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அயர்லாந்து அணியுடனான T20i தொடருக்கான இந்திய அணியின் தலைவராக வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடருக்கு முன்பாக பும்ரா முதுகுப் பகுதியில  காயமடைந்தார். அதனால் அவர் அணியில் இருந்து விலகினார். ஆனால் காயம் முழுவதுமாக குணமடைவதற்குள் அவர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டாலும், மீண்டும் காயத்துகுள்ளாகிய அவர் கடந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு செப்டம்பரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற T20i தொடருக்குப் பிறகு பும்ரா எந்தவொரு கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. இதனிடையே, கடந்த இரண்டு மாதங்களாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சிகளை மேற்கொண்டு வந்த அவர், தற்போது மீண்டும் கிட்டதட்ட ஒராண்டுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

மேலும் IPL தொடரில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே, ரவி பிஸ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி இருந்த பிரசித் கிருஷ்ணா இந்த தொடர் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

இது தவிர துடுப்பாட்ட வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா ஆகியோரும், சகலதுறை வீரர்களாக சபாஷ் அஹமட், வொசிங்டன் சுந்தர் ஆகியோரும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் பிரசீத் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் போன்ற வீரர்களும் அயர்லாந்து அணியுடனான T20i தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, காயங்களுக்கு உள்ளாகியுள்ள கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது, இந்த இரண்டு வீரர்களும் ஆசியக் கிண்ணத்தில் விளையாடுவார்hகளா என்பது குறித்து BCCI தரப்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

அயர்லாந்து அணியுடனான T20i தொடருக்கான இந்திய அணி விபரம்

ஜஸ்ப்ரித் பும்ரா (தலைவர்), ருத்துராஜ் கெய்க்வாட் (உதவி தலைவர்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் காப்பாளர்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் காப்பாளர்), சிவம் துபே, வொசிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், சபாஷ் அஹமட், பிரசீத் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<